×

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புது வரவாக கோவை யானை வந்தது

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புதுவரவாக கோவை யானை நேற்று வந்தது. வைணத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று கொண்டே இருக்கும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. தற்போது புரட்டாசி மாதத்தையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுவாமிக்கு பூஜைகள் நடத்தவும், பக்தர்களுக்கு ஆசி வழங்கவும் கோயிலுக்கு சொந்தமாக 35 வயதான ஆண்டாள் யானை உள்ளது.
இந்த யானை தினமும் அதிகாலை விசுவரூப நிகழ்ச்சியில் பங்கேற்கும். இதில் ரங்கநாதர், யானை முகத்தில் விழிப்பார் என்பது ஐதீகம். மேலும் திருவிழா காலங்களில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கோயில் யானை முன்நிற்கும். அதுபோல் ஊர்வலம் அபிஷேக காலங்களில் யானை மீது தீர்த்த குடம் வைத்து கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் கோயிலுக்கு மேலும் ஒரு யானை வாங்க கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவையில் தனியார் மில்லில் உள்ள கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்த 20 வயதான பிரேமி(எ)லட்சுமி யானையை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வழங்கினர். இதில் நேற்று ஸ்ரீரங்கத்துக்கு வந்த யானை லட்சுமிக்கு இணை ஆணையர் ஜெயராம் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர். தொடர்ந்து ஆண்டாள் உள்ள கொட்டகை அருகே பிரேமியையும் கொட்டகையில் தங்க வைத்துள்ளனர்.

Tags : Coimbatore ,newcomer ,Srirangam , Newcomer to Srirangam Temple, Coimbatore Elephant
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்