×

தூண்டில் வளைவு பாலம் அமைக்க தாமதம் பெரியதாழையில் கடல் சீற்றத்தால் கரை அரிப்பு: கிழக்கு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

சாத்தான்குளம்: தூண்டில் வளைவு பாலம் அமைக்க தாமதமாகும் நிலையில் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் பெரியதாழை கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிப்புக்கு உள்ளான கிழக்கு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.  தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் 400க்கும் மேற்பட்ட படகுகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட்டுள்ளனர். பெரியதாழை கடல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் சீற்றத்தால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்பும் ஏற்பட்டது.

இதுகுறித்து மீனவர்கள் அளித்த புகாரை அடுத்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.25 கோடியில் மேற்கு பகுதியில் 800 மீட்டர் அளவிலும், கிழக்கு பகுதியில் 200 மீட்டர் அளவிலும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது.
 ஆனால், குறைவாக அமைக்கப்பட்ட பகுதியில் கடல் சீற்றம் அதிகரிப்பால் கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்படுவதால் படகுகளை நிறுத்த முடியாத நிலை உருவானது.

இதுகுறித்து தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ, அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டுசென்றனர். இதனைத்தொடர்ந்து மேற்கு பகுதியில் 360 மீட்டர் அளவிலும், கிழக்கு பகுதியில் 240 மீட்டர் அளவில் தூண்டில் வளைவை மேலும் நீட்டித்து அமைக்க திட்டமிடப்பட்டு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்பணியும் கோரப்பட்டது. ஆனால், இதுவரை பெரியதாழையில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.

 இந்நிலையில் பெரியதாழை கடல் பகுதியில் நேற்று ராட்சத அளவில் சீற்றம் ஏற்பட்டது. இதற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கிழக்கு பகுதியில் மீண்டும் மணல் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடலில் இழுத்துச் செல்லப்பட்ட படகுகளை மீனவர்கள்  மீட்டு வந்தனர். கடல் சீற்றத்தால் பாதிப்புக்கு உள்ளான கிழக்கு பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘தூண்டில் வளைவு அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கியும் பணிகள் துவங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. தற்போது மழை காலம் தொடங்க உள்ள நிலையில் மேலும் மணல் அரிப்பு ஏற்படும். இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தூண்டில் பாலம் அமைக்கும் பணியை  விரைந்து துவங்க வேண்டும்’’ என்றனர்.


Tags : bridge ,sea ,Fishermen , Bait arch, bridge, periyathalayil, east side fishermen, to the sea
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...