×

மோதிரத்தில் திருக்குறள், கலாம், ரஜினி!

நன்றி குங்குமம்

அசத்தும் மதுரை நகைத் தொழிலாளர்

தங்க மோதிரத்தினுள் இப்படியெல்லாம் கூட டிசைன்கள் செய்ய முடியுமா என பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறார் மதுரையைச் சேர்ந்த நகைத் தொழிலாளரான நாகராஜன். ஏனெனில், இவரின் வேலைப்பாட்டில் உருவான மோதிரத்திற்குள் திருவள்ளுவரும், காந்தியும், பாரதியும், கலாமும், சூப்பர்ஸ்டார் ரஜினியும் அமர்ந்திருக்கின்றனர். தமிழ் எழுத்துகளும், வெரைட்டியான சிம்பல்களும், நிறுவன அடையாளங்களும் மென்மேலும் அழகூட்டுகின்றன. முப்பது ஆண்டுகளாக நகைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் மோதிரங்களை வித்தியாசமான வேலைப்பாடுகளுடன் வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். இப்போது கொரோனா காலத்தில் மோதிரத்தினுள் திருக்குறளை அட்டகாசமாக வடிவமைத்து பலரின் பாராட்டு களைப் பெற்றுள்ளார். ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர்…’, ‘அகரமுதல எழுத்தெல்லாம்…’ என குறள்களுடன் திருவள்ளுவரின் உருவமும் அதில் ஜொலிப்பது ஆசெம்! இதனுடன் பனிரெண்டு ராசிகளின் குறியீடுகள், வாட்ஸ்அப் சிம்பல் உள்ளிட்ட பலவற்றை மோதிரத்தினுள் டிசைனாக வடிவமைத்துள்ளார் நாகராஜன். ‘‘பூர்வீகமே மதுரைதான். அப்பா, தாத்தா காலத்துல இருந்து நகைத்தொழில் செய்திட்டு இருக்கோம். என்னுடைய பதினாறு வயசுல இந்தத் தொழிலுக்குள்ள வந்தேன். அப்பவே ஏதாவது வித்தியாசமா பண்ணணும்னு ஆசை. என்னுடைய தொழில்ல என்ன செய்ய முடியும்னு நினைச்சப்ப வெரைட்டியா மோதிரத்துல ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு. ஒருமுறை சாக்ஸபோன் இசைக் கலைஞர் ஒருவர் ‘சாக்ஸபோனை மோதிரமா பண்ணித் தரமுடியுமா’னு கேட்டார்.

பண்ணித் தந்தேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்ப இருந்தே வித்தியாசமா பண்ணணும்னு முடிவு பண்ணினேன். பொதுவா, எங்க தொழில்ல ஃபினிஷிங் நல்லா பண்ணிட்டா எல்லாரும் ஊக்குவிப்பாங்க. ‘உங்க வேலைப்பாடு நல்லாயிருக்கு’னு சொல்லும் போது நமக்கும் ஆர்வம் அதிகரிக்கும். அடுத்தடுத்து செய்ய ஆரம்பிப்போம். அப்படித்தான் என்னுடைய ஆர்வம் அதிகமாச்சு. கடைகள்ல இருந்து நூறு பீஸ், இருநூறு பீஸ்னு மோதிரம் செய்ய ஆர்டர் கொடுப்பாங்க. அவங்க வெறுமனே ஆர்டர் மட்டும்தான் செய்வாங்க. இப்படி வேணும்னு எல்லாம் சொல்லமாட்டாங்க. நான்தான் நூறு பீஸும் வேறு வேறா இருக்கணும்னு அதுக்கான வேலைகள்ல இறங்குவேன். ஒண்ணுமாதிரி ஒண்ணு இருக்கக்கூடாதுனு பண்ணுவேன். அதெல்லாம்தான் இப்படி மோதிரத்துல அழகழகான வேலைப்பாடுகள் செய்ய வைச்சது. 90கள்ல நிறைய டாலர்கள், மோதிரங்கள்ல சின்னச் சின்ன வேலைப்பாடுகள் செய்திருக்கேன். அப்ப செல்போன் கிடையாது. போட்டோ எதுவும் எடுக்கமாட்டேன். செய்து கடைகளுக்குக் கொடுத்திடுவேன். பொதுவா, கடைகள்ல நிறைய எதிர்பார்ப்பாங்க. அதுவும் ஒரு வித்தியாசம் காட்டிட்டா நம்மகிட்ட அந்த எதிர்பார்ப்பு கூடும். நிறைய வேலைகளும் தருவாங்க. குறிப்பா, வித்தியாசமான வேலைப்பாடுகள் வேணும்னு கேட்குற வாடிக்கையாளர்கள் வந்தா உடனே என்னைக் கூப்பிட்ருவாங்க. அதை நான் பண்ணித் தருவேன்.

இந்த வேலைகள் போக நேரம் கிடைக்கும்போது என்னுடைய கிரியேட்டிவிட்டி வேலைகளைச் செய்வேன்...’’ என்கிற நாகராஜன், 2011ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது இரண்டு தங்க உலகக் கோப்பைகளைச் செய்து அசத்தியிருக்கிறார். ‘‘அப்ப இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்னு நினைக்கல. ஆனா, ஒவ்வொரு போட்டியிலும் ஜெயிச்சிட்டு வர்றாங்க. அந்நேரம் நான் 450 மில்லி கிராம்ல சின்னதா உலகக் கோப்பை செய்தேன். இது மோதிரம் கிடையாது. பொதுவா செய்தேன். அந்த ஒரிஜினல் உலகக் கோப்பையின் மேல்பகுதியில கிரிக்கெட் பந்து சுழல்வது போல செய்திருப்பாங்க. நானும், அதேமாதிரி பந்து சுழல்ற மாதிரி செய்தேன். அப்புறம், இந்தியா கோப்பையை வென்றதும் நாலு கிராம், ஒன்றேகால் அங்குலத்துல இன்னொரு உலகக் கோப்பை செய்தேன். நண்பர்கள், கடைக்காரர்கள் எல்லாம் பாராட்டினாங்க. அந்த உலகக் கோப்பையை தெரிஞ்சவங்க மற்றும் உறவினர்கள் கல்யாண வீடுகளுக்கு கிஃப்ட்டா கொடுத்தேன். பிறகு, நாலைஞ்சு கடைகள்ல இந்த உலகக் கோப்பை வேணும்னு சொன்னாங்க. அவங்களுக்கும் செய்து கொடுத்தேன்.இந்தமாதிரி புதுசா செய்யும்போது முதல்ல நண்பர்கள்கிட்ட காட்டுவேன். அவங்க ‘நல்லாயிருக்கு. வேணும்’பாங்க. பிறகு, கடைக்காரர்கள்கிட்ட கொடுப்பேன். அவங்க அதைப் பார்த்திட்டு சில கருத்துகளைச் சொல்வாங்க. ஏன்னா, வாடிக்கையாளர்களின் பல்ஸ் அவங்களுக்குத்தான் தெரியும். அதன்படி செய்யச் சொல்லி ஆர்டர் கொடுப்பாங்க...’’ என்கிறவர், திருக்குறள் மோதிரம் பற்றி பேசினார். ‘‘இன்னைக்கு நம்ம தாய்மொழியின் முக்கியத்துவம் பத்தி நிறைய பேசுறோம்.

இதுல நான் என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். எனக்கு திருக்குறள்ல ரொம்ப ஈடுபாடு உண்டு. இதை ஏன் மோதிரத்துல எழுதக் கூடாதுனு தோணுச்சு. அதனால, பத்து மில்லிமீட்டர் உயர மோதிரத்துல திருக்குறளை எழுதினேன். ‘அன்பிலார்…’, ‘அகர முதல…’னு ரெண்டு குறள்கள் கொண்ட ரெண்டு மோதிரங்கள் செய்திருக்கேன். இப்படி பத்து மில்லிமீட்டருக்குள்ள எழுதுறது ரொம்பக் கஷ்டம். ஆனா, செய்யணும்னு செய்திருக்கேன். இது நாலு கிராம் மோதிரம். இதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. நண்பர்கள் மத்தியில் காட்டினதும் அவங்களே இதை எடுத்துக்கிட்டாங்க. தமிழ் எழுத்து, அதிலும் திருக்குறள்னதும் இன்னும் ஆர்வம் காட்டினாங்க. கடைகள்லயும் நிறைய வரவேற்பு. பண்ணின எல்லாத்தையும் டெலிவரி கொடுத்திட்டேன். பொதுவா, மோதிர வேலைகள் ஈஸிதான். ஆனா, அதுக்குள்ள எழுதுற லெட்டர்ஸுக்குதான் நேரமாகும். தொடர்ந்து செய்யவும் முடியாது. ஏன்னா, உத்துப் பார்த்து செய்றது கஷ்டம். கொஞ்சம் கொஞ்சமா செய்தேன். அடுத்து, அப்துல்கலாம் ஐயா உருவம் பொறித்த மோதிரம் ரெடி பண்ணினேன். இப்ப பனிரெண்டு ராசிகளுக்கான குறியீடு செய்திருக்கேன். இதுவரை பேப்பர்ல ஒவ்வொரு ராசிக்கான குறியீட்டை பார்த்திருப்பீங்க. அதைப் பண்ணலாம்னு தோணுச்சு. முதல்ல என்னோட ராசிக்கான சிம்பல் போட்டேன். அப்படியே பனிரெண்டு ராசிக்கும் செய்தேன். அதுவும் 80 பீஸ் வரை கடைகளுக்குப் போயிருக்கு. அப்புறம், இன்றைய தலைமுறைக்கான சமூக வலைத்தளங்களின் சிம்பல் போட்டிருக்கேன். என் பொண்ணு காலேஜ் படிக்கிறா.

அவளின் தோழிகள்தான் இதுக்கான டிசைனைக் கொடுத்தாங்க. அதன்படி செய்திருக்கேன். விவசாய சம்பந்தமான மோதிரம், தமிழ் லெட்டர்ஸ், சமூக வலைத்தள சிம்பல்னு ஐநூறு பீஸ் வரை இப்ப கடைகளுக்குச் செய்திருக்கேன்.இன்னைக்கு நகைத்தொழில் மிஷினை நம்பியே போயிட்டு இருக்கு. மிஷின், கைவேலைப்பாடுன்னு இருந்தாலும் மதுரையைப் பொறுத்தவரை நிறைய தங்க நகைத் தொழிலாளர்களின் வேலைப்பாடு சிறப்பு வாய்ந்தது. நான் மட்டுமில்ல, என்னை மாதிரி பலபேர் தனித்துவமிக்க கலைஞர்களா இங்க இருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு நண்பர் முந்நூறு மில்லி கிராம்ல ஒரு தாலிச் செயின் செய்திட்டு இருக்கார். இந்த விஷயத்தை எல்லாராலும் பண்ண முடியும்தான். ஆனா, வறுமைச் சூழல்ல இந்த ஆர்வம் அவங்க கவனத்துல வராது. நான் செய்ற வேலையில் பத்து சதவீதம் மிஷின் வேலைப்பாடும் இருக்கு. அப்பதான் ஃபினிஷிங் நல்லாயிருக்கும். இப்ப நான் திருக்குறளை பெண்கள் மோதிரத்துல பண்ணலாம்னு இருக்கேன். பெண்கள் அணியும் மோதிரம் இன்னும் சின்னதா இருக்கும். அதுக்குள்ள குறள் எழுத முயற்சி பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமே செய்திடுவேன்...’’ உற்சாகமாகச் சொல்கிறார் நாகராஜன்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்:மதுரை கணேசன்

Tags : Kalam ,Rajini , Thirukkural, Kalam, Rajini in the ring!
× RELATED விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும்...