மியான்மரில் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சென்னை திரும்பினர்: விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு.!!!

சென்னை: மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட காசிமேட்டைச் சேர்ந்த 8 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். காசிமேடு நாவூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசை படகில், திருவொற்றியூர் குப்பம் மற்றும்  திருச்சினாங்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த லட்சுமணன், சிவக்குமார், பாபு, பார்த்திபன், முருகன், கர்ணன், தேசப்பன், ரகு, மற்றொரு தேசப்பன் உள்ளிட்ட 9 மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 22ம் தேதி  ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுனர்.

7 நாட்களில் கரைக்கு திரும்ப வேண்டிய மீனவர்கள் 50 நாட்களுக்கு மேலாகியும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர், காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல்  நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே, காணாமல் போன 9 மீனவர்கள் கடந்த 14ம் தேதி மியான்மர் நாட்டில் மீட்கப்பட்டனர். எதிர்பாராதவிதமாக, கடந்த மாதம் 21-ம் தேதி, மியான்மர் நாட்டில் உள்ள விசைப்படகு ஒன்று, கடலில்  சிக்கியதால் அவர்களுக்கு உதவ சென்ற, திருச்சினாக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் (35)பாபு என்பவர், கடலில் மூழ்கி காணாமல் போனார்.

தொடர்ந்து, மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் பணியில், மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டனர். கொரோனா காரணமாக விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், இதனால் சிறப்பு விமானம்  மூலம் மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, வந்தே பாரத் திட்டம் மூலம் 8 மீனவர்கள் இன்று டெல்லி அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, டெல்லியில் இருந்து விமானம் மூலம் 8 மீனவர்கள் சென்னை விமான  நிலையம் வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களை மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார்.

Related Stories:

>