×

தென் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம்.. 6 மாதங்களில் ரூ.50,000 கோடி கடன் வாங்கியுள்ளது!!

சென்னை : நடப்பு நிதியாண்டில் தென் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.50,000 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது. இந்தியாவிலேயே சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலையில் இருந்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து நிதிப் பகிர்வு குறைவான அளவிலேயே கிடைத்தாலும் மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் இதர செலவுகளுக்காகவும் சந்தையில் கடன் வாங்கி செலவழித்து வருகிறது தமிழக அரசு. மத்திய நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்திற்கு கிடைக்கும் நிதி குறைவு, சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தமிழகத்தின் கடன் சுமையும் அதிகரித்து வருகிறது.

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு, புயல், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஜிஎஸ்டியில் மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய நிதி தாமதம் ஆவது போன்ற பல்வேறு காரணங்களால் தமிழக அரசின் நிதி நிலையில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதோடு, தமிழக அரசின் வரி வருமானம் குறைந்ததுடன் கொரோனா சிகிச்சைக்கான செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் அதிகளவில் கடன் வாங்க வேண்டிய சூழலில் தமிழகம் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டில் தென் இந்திய மாநிலங்களிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, நடப்பு 2020-21ம் நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் தமிழகம் மொத்தம் ரூ.50,000 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது. இதன் மூலம் சந்தையில் அதிகம் கடன் வாங்கிய இந்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. 2019ம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் வரையில் வாங்கிய ரூ.24,190 கோடி கடனுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு 107% உயர்வாகும்.நடப்பு நிதியாண்டில் ரூ. 59,209 கோடி கடன் வாங்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.மதிப்பிடப்பட்டு இருந்த ரூ.59,209 கோடியில் ரூ. 50,209 கோடியை முதல் 6 மாதத்திலேயே தமிழக அரசு வாங்கிவிட்டது.

Tags : Tamil Nadu ,states ,South India , South India, credit, Tamil Nadu topped, crore, debt
× RELATED தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று...