×

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் நடால்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன்  கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் அரை இறுதியில் விளையாட ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். உலகின் 2ம் நிலை வீரரான  நடால், நேற்று காலிறுதிப் போட்டியில் உலகின் 75ம் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்த்து விளையாடினார். முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் காலிறுதியில் விளையாடும் சின்னர், அனுபவ வீரரை எதிர்த்து விளையாடுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல் முதல் செட்டில் விளையாடினார். அதனால் முதல் செட் டை பிரக்கர் வரை நீண்டது. ஆனாலும் அந்த செட்டை 7-6 (7-4) என்ற கணக்கில் நடால் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

அடுத்தடுத்த செட்களில் நடால் வேகத்தை சமாளிக்க முடியாமல் சின்னர் தடுமாறினார். அதனால் அடுத்த 2 செட்களையும் 6-4, 6-1 என்ற கணக்கில் நடால் வசப்படுத்தினார். 3-0 என்ற நேர் செட்களில் சின்னரை வீழ்த்திய நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 2மணி 49 நிமிடங்கள் நீடித்தது. 5 மணி நேர போராட்டம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு காலிறுதியில் அர்ஜென்டினாவின் டீகோ ஷ்வார்ட்ஸ்மேன் (14வது நிலை), ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் (3வதுநிலை) ஆகியோர் மோதினர். அனல் பறந்த இந்தப் போட்டியில் 3 செட்கள் டை பிரேக்கர் வரை நீண்டது. அடுத்தடுத்த செட்களை இருவரும் மாறிமாறி கைப்பற்ற மொத்தம் 5 செட்கள் 5 மணி நேரம் 8 நிமிடங்கள் நீடித்தது.

அவற்றில் 1, 4, 5 வது செட்களை டீகோ 7-6 (7-1), 7-6 (7-5), 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். தீம் தனது பங்குக்கு 2, 3வது செட்களை மட்டும்  7-5, 7-6 (8-6) என்ற கணக்கில் வசப்படுத்தினார். அதனால் ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற செட் கணக்கில் வென்ற டீகோ முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் முதல் அரையிறுதியில் ரபேல் நடாலை எதிர்த்து விளையாட உள்ளார்.

குவித்தோவா அசத்தல்
பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ஜெர்மனியின் லாரா சீஜ்மண்டுடன் (66வது ரேங்க்) நேற்று மோதிய பெத்ரா குவித்தோவா (செக்.) 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு குவித்தோவா பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கெனின் முன்னேற்றம்: மகளிர் பிரிவில் நேற்று நடந்த மற்றொரு கால் இறுதியில் அமெரிக்காவின் சோபியா கெனின் 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை டேனியலி கோலின்சை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.


Tags : French Open ,semifinals ,Nadal , French Open tennis: Nadal in the semifinals
× RELATED ஆஸி. ஓபன் டென்னிஸ் காயத்தால் விலகினார் நடால்