×

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நிலையில் எச்1பி விசாக்களுக்கு மீண்டும் கட்டுப்பாடு

* டிரம்ப் அதிரடி நடவடிக்கை
* இந்தியர்களுக்கு கடும் பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், அமெரிக்கர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக எச்1பி விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது, இந்தியர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி வேலை பெறுவதற்காக அந்நாட்டு அரசு எச்-1பி விசாக்களை வழங்கி வருகிறது. இதில், மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகம் பயன் அடைந்தவர்கள் இந்தியர்களே. முக்கியமாக, ஐடி நிறுவனங்கள் எச்-1பி விசா மூலம் ஏராளமான இந்தியர்களை பணி அமர்த்தியுள்ளன.

கொரோனா பாதிப்பின் விளைவாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்காக எச்-1பி விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் தற்காலிக தடை விதித்தது. இதற்கு, அந்நாட்டு நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது.
இந்நிலையில், எச்-1பி விசாக்களுக்கு அமெரிக்க அரசு மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இம்முறை ‘சிறப்பு தொழில்’ மற்றும் ‘நிறுவன முதலாளிகள்-தொழிலாளர் உறவுமுறை’ ஆகிய இரு பிரிவுகளில் பல்வேறு கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, எச்-1பி விசாவுக்கு அனுமதி அளிக்கும் போதும், அதன் பிறகும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தையும், பணியாளரிடமும் அரசு தீவிர ஆய்வு மேற்கொள்ளும்.

எச்-1 விசா கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட வேலை மற்றும் அனுபவத்திற்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது, அமெரிக்கர்களுக்கு பணி வழங்குவதற்கு பதிலாக அவர்களை விட குறைவான சம்பளத்தில் இந்தியர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இதன் காரணமாக, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது என்பதே குற்றச்சாட்டு. எனவே, இந்த சம்பள ஒழுங்குமுறையை கொண்டு வருவதன் மூலம் சரியான ஊழியர்களுக்கு சரியான வேலை வழங்கப்படும்,

மலிவான சம்பளத்தில் ஆட்கள் கிடைக்கிறார்கள் என்பதற்காக அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு சுரண்டப்படாது என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கையால் இந்திய ஐடி ஊழியர்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்கர்களின் ஓட்டுக்களை கவர்வதற்காக தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய கட்டுப்பாடுகளை டிரம்ப் அரசு கொண்டு வந்திருப்பது அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நிறுத்திட்டாங்க...
கொரோனா பாதிப்பை தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு நிவாரண நிதியாக பல லட்சம் டாலர்களை டிரம்ப் அரசு அள்ளிக் கொடுத்தது. அதே போல், 2வது நிவாரண நிதி தர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், டிரம்ப்  நேற்று வௌியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தேர்தல் முடியும் வரை, நிவாரண சலுகை பற்றி ஜனநாயக கட்சியுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளேன். நான் வெற்றி பெற்றதும், மிக முக்கிய நிதிச் சலுகை மசோதா நிறைவேற்றப்படும்,’ என்று கூறியுள்ளார்.

டிரம்ப்புக்கு தொற்று இருந்தால் விவாதத்துக்கு வர மாட்டேன்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்ப் 4வது நாளிலேயே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், வரும் 15ம் தேதி அதிபர் வேட்பாளர்களான டிரம்ப்-ஜோ பிடென் பங்கேற்கும் 2வது நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விவாதத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக கூறியிருக்கும் பிடென், அதே சமயம், டிரம்ப் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீளாத பட்சத்தில் விவாதத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறி உள்ளார்.

மற்றொரு உதவியாளருக்கு கொரோனா
அதிபர் டிரம்ப்பின் உதவியாளர் ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப், அவரது மனைவி மெலானியாவுக்கும் தொற்று ஏற்பட்டது. தற்போது, டிரம்ப்பின் மற்றொரு உதவியாளரான ஸ்டீபன் மில்லருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வெள்ளை மாளிகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

Tags : United States ,elections , Restriction on H1B visas in the United States as elections approach
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்