×

மணல் கொள்ளை விவகாரம் விஸ்வரூபம்: நெல்லை கனிமவளத்துறை உதவி இயக்குநர் மாற்றம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கனிம வளத்துறை உதவி இயக்குநர் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கி 130 கி.மீ. தூரம் பயணித்து  புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு பாயும் ஆற்றுப்படுகைகள் மணற்பாங்கான பகுதி என்பதால் பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பொட்டல் கிராமத்தில் மணல் கொள்ளை நடந்து வருவதாக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. பொட்டல் பகுதியில் ஒரு எம்.சாண்ட் குவாரிக்கு ரூ.9.50 கோடி அபராதம் விதித்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் பிரதீக் தயாள் உத்தரவிட்டார்.
மணல் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், ரூ.9.50 கோடி அபராதம் விதிக்கும் அளவிற்கு அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏன் என்று அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். பொட்டலில் மணல் கொள்ளைக்கு உடந்தையாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அனைத்து துறை அதிகாரிகள், போலீசார் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நெல்லை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் சபிதா தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Assistant Director ,Nellai Minerals , Sand Robbery Case Viswaroopam: Nellai Minerals Assistant Director Change
× RELATED உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்