×

நம்பிக்கையோடு நம் பாதங்களை முன்வைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: நம்பிக்கையோடு நம் பாதங்களை முன்வைப்போம் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 2021ம் ஆண்டுக்கான முதலமைச்சர் வேட்பாளராக உங்கள் அனைவரின் ஆசிகளோடு ஒருமித்த கருத்தால் நான் அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.  உழவன் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமைச் சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது. இதற்காக என் ஆயுளின் கடைசி விநாடி வரை இந்த இயக்கத்திற்கு நான் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்.

2021ம் மூன்றாம் முறையாக ஆட்சியைத் தொடர்கிற அரசியல் புரட்சியை உங்களின் ஒத்துழைப்போடு நான் நிறைவேற்றிக் காட்டுவேன் என்பது சத்தியம். ஒட்டு மொத்த செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி விகிதங்களுக்காக இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழகம் என்கிற பெருமையை மத்திய அரசின் விருதுகளால் நாம் நிலைநாட்டி இருக்கிறோமோ, அந்த பொற்காலத்தை மீண்டும் உருவாக்கி சரித்திரம் படைத்திடுவோம். காவேரி உரிமையை மீட்டது, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்கி அரை நூற்றாண்டு கனவுக்கு உயிர் கொடுத்திருப்பது,

ஆனைமலை - நல்லாறு திட்டம், காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு உள்ளிட்ட திட்டங்களால் ஏரோட்டும் உழவினத்தின் நீரோட்டம் பெருக்கி வருவது, தனிநபர் வருமானத்தில் தமிழகத்தை மேம்படுத்தியிருப்பது, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருப்பது, கொரோனா காலத்திலும் சிறப்பான பணி செய்து மக்களை காத்தது, என்றெல்லாம் அளப்பரிய தொண்டுகளை நாம் ஆற்றியிருக்கிறோம். சாதி, மத பூசல்களை இல்லாது சட்டம், ஒழுங்கை அமைதியோடு பராமரித்து, இந்தியாவே வியந்து போற்றும் இணையற்ற மாநிலமாக தமிழகத்தை வழிநடத்தி வருகிறோம்.

நமது இலக்கும், நமது லட்சியமும் மக்களின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மட்டுமே உரியது. இதனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உழைக்கும் நம்மை தமிழக மக்கள் உளமார ஆதரிக்கிறார்கள். நாளையும் ஆதரிப்பார்கள். எனவே, நம்பிக்கையோடு நம் பாதங்களை முன்வைப்போம், பயணத்தை முன்னெடுப்போம். 2021லும் ஜெயலலிதாவின் லட்சிய அரசை புனித ஜார்ஜ் கோட்டையிலே மீண்டும் படைப்போம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Edappadi ,volunteers , Let’s put our feet up with confidence: Chief Edappadi’s letter to the volunteers
× RELATED வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பது அவசியம்... கேப்டன் ரோகித் உற்சாகம்