×

ஹத்ராஸ் இளம்பெண் விவகாரம்; சிறப்பு விசாரணை குழுவுக்கு மேலும் 10 நாள் அவகாசம்: உபி அரசு உத்தரவு

லக்னோ: ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரம், கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு, தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராசில் 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண் கடந்த மாதம் 14ம் தேதி 4 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலத்தை போலீசார் அவசர அவசரமாக நள்ளிரவில் எரித்து விட்டனர்.

பின்னர், அப்பெண் பலாத்காரமே செய்யப்படவில்லை என்று போலீசார் அறிவித்தனர். இதற்கு, கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இளம்பெண்ணின் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, கடந்த மாதம் 30ம் தேதி மாநில உள்துறை செயலர் ஸ்வரூப் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். இது, 7 நாட்களுக்குள் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரசு உத்தரவின்படி நேற்றுடன் 7 நாட்கள் முடிந்த நிலையில், இக்குழு தனது விசாரணை அறிக்கையை நேற்று தாக்கல் செய்யவில்லை.

அதற்கு மாறாக, ‘விசாரணை இன்னும் முழுமையாக முடியவில்லை. எனவே, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்,’ என அரசிடம் இக்குழு கோரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார். இதன்படி, வரும் 17ம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சிறப்பு விசாரணை குழு அறிவித்துள்ளது.

Tags : Special Investigation Commission: UP Government Order , Hadras teen affair; 10 more days for Special Investigation Commission: UP Government Order
× RELATED உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக...