கோபி அருகே மகளை திருமணம் செய்து தர மறுத்த தாய் சரமாரி வெட்டிக்கொலை: அரிவாளுடன் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்

கோபி: கோபி அருகே மகளை திருமணம் செய்து தர மறுத்த தாயை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த லாரி டிரைவர் தலைமறைனார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் மேரி (56). இவரது கணவர் தமிழ்தாசன் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் 2 பேருக்கு திருமணமாகிவிட்டது. மேரி தள்ளுவண்டி வியாபாரம் செய்து வந்தார். மற்ற 3 மகள்கள் தனியார் மில்லில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.  பர்கூரை சேர்ந்தவர் முருகன் (27). லாரி டிரைவரான இவர், மேரியின் மகள் வர்ஷினி மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து வைக்ககோரி வற்புறுத்தி வந்துள்ளார்.

வர்ஷினி படித்து கொண்டிருந்ததால், மேரி மறுத்துள்ளார். இந்நிலையில், வர்ஷினி வீட்டில் இருப்பதை அறிந்த முருகன் நேற்று முன்தினம் இரவு பைக்கில் மொடச்சூர் சென்றார். மேரி வீட்டின் முன்பு தனது தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, மேரியிடம் வர்ஷினியை திருமணம் செய்து தருமாறு கேட்டார். மேரி மறுக்கவே முருகன் பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினார். இதில் மேரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வரவே, முருகன் பைக்கை விட்டுவிட்டு தப்பியோடினார். அவரை பிடிக்க முயன்ற கணேசன் என்பவரையும் வெட்டினார்.

அங்கிருந்து தப்பிய முருகனை, ரவி என்பவர் பிடிக்க முயன்றபோது அவரை தள்ளிவிட்டுவிட்டு ரவியின் பைக்கில் தப்பித்து சென்றார். இதையடுத்து, படுகாயமடைந்த மேரி, கணேசன் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேரி நேற்று அதிகாலை பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோபி டி.எஸ்பி. தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>