×

எப்போது யார் காலை யார் வாரலாம் எனக் காத்திருப்பவர்கள் மக்களுக்காக தற்போது ஒன்றுகூடவில்லை கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க கூடியுள்ளனர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “எப்போது யார் காலை யார் வாரலாம் எனக் காத்திருப்பவர்கள், தற்போது ஒன்றுகூடி இருப்பது மக்களுக்காக அல்ல, கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்க. இந்தக் கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையில் இருந்து விரட்டுவோம்’’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாக நேற்று பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தை ஆளும் அரசு, இந்த மாவட்டத்துக்கு மட்டுமல்ல; எந்த மாவட்டத்துக்கும் எதுவும் இதுவரை செய்யவில்லை. தமிழகத்தில் மட்டும் 46 சர்க்கரை ஆலைகள் மூலமாக விவசாயிகளுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் தரப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதில் அரசு சர்க்கரை ஆலைகளும் உள்ளன,  தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இருவருமே முழுமையாகத் தரவில்லை. பாக்கி வைத்துள்ளார்கள் என்றால் அந்தக் தொகையை வாங்கித் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை அல்லவா?. இந்த லட்சணத்தில் மத்திய அரசு வேளாண்மைச் சட்டம் வந்தால் என்ன ஆகும்?. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகச் சட்டம் கொண்டு வந்துவிட்டு, அதனை விவசாயிகள் ஆதரிக்க வேண்டும் என்று பாஜ நினைக்கிறது. அந்தச் சட்டத்தை ‘நானும் விவசாயி தான்’ என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். அந்த மூன்று சட்டங்களும் நிறைவேறினால் வேளாண்மை சிதைந்து போகும். விவசாயி வாழ்க்கை இருண்டு போகும்.

அதனால் நாங்கள் எதிர்க்கிறோம். அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள  மாநிலப் பட்டியலில் இருக்கும் பொருள் 14ல் இருக்கும் வேளாண்மை தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. அதேபோல் நிலம் - நிலம் சார்ந்த உடன்படிக்கை ஆகியவை மாநிலப் பட்டியல் 18ல் இருக்கிறது. இந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இதனைத் தடுக்க முடியாத பழனிசாமிக்கு தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளத் தகுதி நிச்சயமாக கிடையாது?. கடந்த நான்காண்டுக் காலமாக ஆட்சி நடக்கவில்லை. அதிமுக என்ற கட்சியைக் கோட்டையில் வைத்து நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

முதலில் - பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் சண்டை. அடுத்து - பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் சண்டை. பின்னர் - பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் சண்டை. அதற்கடுத்து - பன்னீர்செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் சண்டை - இதுதான் நான்காண்டு காலமாக தமிழ்நாட்டில் நடக்கிறது. எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடுகிறது. பன்னீர்செல்வமாக இருந்தாலும் பழனிசாமியாக இருந்தாலும் காலில் விழுந்து பதவியை வாங்கியவர்கள் என்பதால் ஒருவர் காலை இன்னொருவர் வாருவது அவர்களது பிறவிக்குணமாக ஆகிவிட்டது. ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்.

அந்த விசாரணைக் கமிஷனில் முதல் ஆளாக அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும்’ என்று சொன்னவர் பன்னீர்செல்வம். அவரே விசாரணைக் கமிஷனுக்கு போகவில்லை. எப்போதும் நிறுத்தி நிதானமாகப் பேசக் கூடியவர். “பன்னீர்செல்வம் தன் மீதான ஊழல் புகார்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியதே ஓ.பி.எஸ்.தான். ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது சேகர் ரெட்டிக்கு பதவி போட்டுக் கொடுத்தது பன்னீர்செல்வம்தான்’ என்று பேசியவர் அமைச்சர் சி.வி.சண்முகம். இப்படிப்பட்ட ஆட்கள் தற்போது ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம்?. மக்களுக்காகவா? அல்ல. இன்னும் ஆட்சி முடிய ஆறுமாதம் இருக்கிறது.

அதுவரைக்கும் ஒன்றாக இருந்து கொள்ளையடிப்போம் என்பதற்காக ஒன்றுசேர்ந்துள்ளார்கள். இன்று நடப்பது ஆட்சியல்ல; வீழ்ச்சி. இந்த வேதனையாட்சி விரைவில் முடிவுக்கு வரவேண்டும். இந்த வீழ்ச்சி விரைந்து தடுக்கப்பட வேண்டும். அதற்கான பிரச்சாரப் பணியை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இத்தகைய கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம். இவ்வாறு உரையாற்றினார்.


Tags : MK Stalin ,DMK , For people who are always in expectation that morning varalam who are currently meeting, and the looting of the assembled: DMK leader MK Stalin's Speech
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...