×

பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களை நியமிக்க வேண்டும்: மத்தியஅரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: அஞ்சல்துறை போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழியே தெரியாத  வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழித் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விட அதிக மதிப்பெண் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி, மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் அறிவுரையால் இம்முறைகேடுகளை தடுக்க முடியாது இவை தொடரவே செய்யும். தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை நியமிப்பது மட்டும்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு. சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தும் உறுதிப்படுத்துகிறது. மொத்தத்தில் மத்தியஅரசு பணிகளில் மாநில ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம்.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் தவிர்த்த பிற பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிப்பதன் மூலம் வட இந்தியர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுவதும், தேர்வுகளில் முறைகேடுகள் நடத்தப்படுவதும் தடுக்கப்படும். மேலும் மத்திய அரசு அலுவலகங்களை தமிழ்நாட்டு மக்கள் எளிதாக அணுகி சேவை பெற முடியும். எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் அல்லாத பணிகளில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : companies ,government ,Ramadas , Appoint local people in public sector companies: Ramadas urges federal government
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!