×

விடியவிடிய நடந்த மோதல் முடிவுக்கு வந்தது: அதிமுக முதல்வர் வேட்பாளரானார் எடப்பாடி

* 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அமைப்பு
* இபிஎஸ் அணியில் 6 பேர், ஓபிஎஸ் அணியில் 5 பேர் இடம் பிடித்தனர்

சென்னை: அதிமுக அமைச்சர்கள் விடியவிடிய நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 11 பேர் கொண்ட வழிகாட்டி குழுவும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 2 மாதமாக நடந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளதால், தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது.

இதனால் ஆளும் கட்சியில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் தான் தேர்தல் பணிகளில் ஈடுபட முடியும் என்று ஆளும் கட்சியில் போர்க் குரல் எழுந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்தார். ஆனால் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர். இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 12 அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சமாதானப்படுத்தினர். பின்னர் முதல்வர் வேட்பாளர் குறித்து யாரும் பேசக்கூடாது என்று எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பில் அறிக்கை வெளியானது.

இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி மூத்த தலைவர்களின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நேரடியாக கருத்து மோதல் வெடித்தது. கடந்த மாதம் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் முன்மொழிந்தார். இதனால் கூட்டத்தில் பேசிய பலரும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க வேண்டும் என்று கூறினர். அப்போது திடீரென்று கட்சியின் அமைப்பு செயலாளர் ெஜ.சி.டி.பிரபாகர் எழுந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் மனதை புண்படுத்தி யாரும் வெல்ல முடியாது. அவரை சமாதானப்படுத்தித்தான் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.

2017ம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த முழு அதிகாரம் வழங்க வேண்டும். அந்த குழுதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். எனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என்று ஓபிஎஸ் கூறிவிட்டார். அப்படி இருக்கும்போது ஏன், அவசரப்பட வேண்டும் என்றார். அவருக்கு ஆதரவாக பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரவு தெரிவித்தார். அப்போதும், ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் பேசினார். இதனால் செயற்குழு கூட்டத்தில் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதையடுத்து துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அக்டோபர் 7ம் தேதி (நேற்று) அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார். இந்த கூட்டத்திற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நடத்திய கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தார். அதன்பின்னர் நடந்த இரு விழாக்களையும் புறக்கணித்தார். அதேநேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். முதல்வர் எடப்பாடியும் மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு தரப்பினரும் தங்களது பலத்தை காட்டி வந்தனர்.

இதனால் அதிமுகவில் உட்கட்சி மோதல் பூதாகரமாக வெடித்தது. இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பெரியகுளத்துக்கு பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார். அங்கு அமைச்சர் உதயகுமார் மற்றும் 5 எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவரோ எதுவுமே நடைபெறாததுபோல காட்டி வந்தார்.
செயற்குழுவில் எடுத்த முடிவுபடி, முதல்வர் வேட்பாளரை அறிவிக்க ஒரு சில நாட்களே இருந்ததால் அதிமுகவில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்தது. இந்தநிலையில், தலைமை செயலகத்தில் 18 அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்து கடந்த திங்கட்கிழமை (5ம் தேதி) எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜெ.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்தநிலையில், கோட்டைக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை அழைத்தார். இந்த தகவலை பெரியகுளத்தில் இருந்த பன்னீர்செல்வத்திடம் கே.பி.முனுசாமி தெரிவித்தார். அப்போது, `முதலில் வழிகாட்டு குழு அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். அந்த குழுதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்பதில் தான் தெளிவாக இருக்கிறேன். நான் முதல்வர் வேட்பாளருக்கு போட்டியிடவில்லை. ஆனால் பொதுக்குழு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார். இதை எடப்பாடியிடம் தெளிவாக கூறவும்’’ என்றார்.

இதை கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சென்று எடப்பாடியிடம் தெரிவித்தனர். ஆனால் அவரோ வழிகாட்டு குழு அமைக்கவே முடியாது என்றார். இதையடுத்து டெல்லி பாஜ தலைமை எடப்பாடிக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து வழிகாட்டு குழு அமைக்க எடப்பாடி சம்மதித்தார். இந்த தகவல் தெரிந்ததும் திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு சென்னைக்கு வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரை மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, உதயகுமார் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். பின்னர் அமைச்சர்கள் குழு முதல்வரிடம் பேசினார். இப்படி நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் முழுவதும் மாறி மாறி அமைச்சர்கள் எடப்பாடி, ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தை நேற்று அதிகாலை 4 மணி மணி வரை நடந்தது. அப்போது வழிகாட்டு குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இறுதியாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் 6 பேரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 5 பேர் பட்டியலும் தயாரிக்கப்பட்டது. அதை அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து இறுதி செய்தனர். அப்போது ஏற்கனவே சொன்னபடி வழிகாட்டு குழுவுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். அதை கட்சியின் சட்டதிட்ட படிவத்தில் (பைலாவில்) குறிப்பிட வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறினார். இதற்கு எடப்பாடி மறுத்தார். வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறினார். அதன்படி அமைக்கப்பட்டு விட்டது. இப்போது முழு அதிகாரம் குழுவுக்கு வழங்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அதிகாரம் என்றார்.

இருவரும் தங்கள் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தனர். ஆனால் 7ம் தேதி (நேற்று) முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று அறிவித்து விட்டதால் அதில் இருந்து பின்வாங்க கூடாது என்பதிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். அதேநேரம், பன்னீர்செல்வம் வழிகாட்டு குழுவுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். அதை பைலாவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நின்று விட்டார். இதனால் வேறு வழியில்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாலை விட்டுக் கொடுத்தார். அதன்படி வழிகாட்டு குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதற்கான பைலா ரெடி செய்யப்பட்டு, அதிகாலையில் இருவரும் கையெழுத்திட்டனர். அதோடு கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனனும் கையெழுத்திட்டார்.

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்த அதே நேரம், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவில் தங்களது பெயர்களை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி அணியில் பலரும் முட்டி மோதினர். பல அமைச்சர்கள் நேற்று முன்தினம் வரிசையாக முதல்வரை சந்தித்து பேசினார். இதனால் வழிகாட்டு குழுவில் இடம்பெறுகிறவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பெயர்களை தெரிந்து கொள்ள மூத்த தலைவர்கள் முட்டி மோதிப்பார்த்தனர். ஆனால் கடைசி வரை ரகசியம் காக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணி வரை எமகண்டம் என்பதால், 9.35 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். 9.38 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எல்லோரையும் வரவேற்றார்.

பின்னர் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போது அங்கு கூடி இருந்த நிர்வாகிகள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். பின்னர் எடப்பாடி - ஓபிஎஸ் ஒருவருக்கொருவர் சாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினர். 9.50 மணிக்கு தொடங்கிய கூட்டம் 10.10 மணிக்கு முடிந்தது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

10.40 மணிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி அலுவலகம் முன்பு உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு ஜெயலலிதா சமாதிக்கு புறப்பட்டு சென்றனர். இதன்மூலம் கடந்த இரண்டு மாதமாக அதிமுகவில் நடந்து வந்த உட்கட்சி மோதலுக்கு நேற்று காலை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தேர்வு எடப்பாடி பழனிசாமி நன்றி
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கத்தில் ஜெயலலிதா இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப அதிமுகவை சீரும் சிறப்போடும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லவும், ஜெயலலிதா கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் அதிமுகவை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் அஞ்சலி
சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அப்போது கட்சி அலுவலகத்தில் கூடி இருந்த தொண்டர்கள் பட்டாசு, இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தனர்.அங்கு அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட வழிகாட்டு குழுவினரும், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து அருகில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் புதிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவிடத்தில், `நாளை நமதே’ என்ற வாசகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

ஓபிஎஸ் வீட்டுக்கு நேரில் சென்றார் எடப்பாடி
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 6 மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்றார். அவரை, ஓபிஎஸ் வீட்டு வாசல் வரை வந்து வரவேற்றார்.

ஓ.பன்னீர்செல்வம் மகனும் அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத் முதல்வர் எடப்பாடி காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.முதல்வர் எடப்பாடியுடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்தனர். உள்ளே சென்ற அனைவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசினர். இந்த ஆலோசனையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின்போது, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் நன்றி தெரிவித்துக் கொண்டார். ஓ.பன்னீர்செல்வமும், தனது கோரிக்கையை ஏற்று 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

11 பேர் கொண்ட வழிகாட்டு குழு விவரம்

எடப்பாடி அணி (6 பேர்)
1. திண்டுக்கல் சீனிவாசன், வனத்துறை அமைச்சர் அமைப்பு செயலாளர்
2. பி.தங்கமணி, மின்சாரத்துறை அமைச்சர் நாமக்கல் மாவட்ட செயலாளர்
3. எஸ்.பி. வேலுமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்
4. டி.ஜெயக்குமார், மீன்வளத்துறை அமைச்சர் அமைப்பு செயலாளர்
5. சி.வி.சண்முகம், சட்டத்துறை அமைச்சர் விழுப்புரம் மாவட்ட செயலாளர்
6. ஆர்.காமராஜ், உணவுத்துறை அமைச்சர் திருவாரூர் மாவட்ட செயலாளர்

ஓ.பன்னீர்செல்வம் அணி (5 பேர்)
1. ஜெ.சி.டி.பிரபாகர், அமைப்பு செயலாளர் அதிமுக செய்தி தொடர்பாளர்
2. பி.எச்.மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்பி அமைப்பு செயலாளர்
3. ப.மோகன், முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர்
4. இரா.கோபாலகிருஷ்ணன், மதுரை முன்னாள் எம்பி தேர்தல் பிரிவு இணை செயலாளர்
5. கி.மாணிக்கம், சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ

Tags : clash ,Vidyavidiya ,AIADMK ,Edappadi ,candidate , Vidyavidiya clash ends: AIADMK chief ministerial candidate Edappadi
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...