×

ராஜஸ்தானை வீழ்த்தி பட்டியலில் முதலிடம் : எங்கள் பீல்டிங்கால் பெருமைப்படுகிறேன்.. மும்பை கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று இரவு நடந்த 20வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவரில் மும்பை 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் 47 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 79 ரன் எடுத்தார். கேப்டன் ரோகிர்சர்மா 35 (23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்த்திக் பாண்டியா 30 (19பந்து), டிகாக் 23, கர்ணல் பாண்டியா 12 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில், ஸ்ரேயாஸ்  கோபால் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 194 ரன் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 0, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 6, சஞ்சு சாம்சன் 0 ,லோம்ரோர் 11 ரன்னில் வெளியேறினர். தனிநபராக ஒருபுறம் போராடிய ஜோஸ்பட்லர் 70 ரன்னில் (44 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்ஆனார். எல்லைக்கோடு அருகே பொல்லார்ட் அற்புதமாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார். முடிவில் ராஜஸ்தான் 18.1 ஓவரில் 136 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை 57 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா 4 , டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சூர்ய குமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.  6வது போட்டியில் 4வது வெற்றியை பெற்ற மும்பை 8 புள்ளிகளுடன் பட்டியலில்  மீண்டும் முதலிடம் பிடித்தது. ராஜஸ்தான் 5வது போட்டியில் தொடர்ச்சியாக 3வது தோல்வியை சந்தித்தது.

வெற்றிக்கு பின் மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: நாங்கள் சக்தியுடன் விளையாட முயற்சி செய்கிறோம். எங்களுக்கு தரமான அணி கிடைத்துள்ளது. அவர்கள் ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம். அனைவரும் திறமையானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இங்குள்ள பிட்ச் உதவியாக இருக்கிறது. எங்கள் பீல்டிங் புத்திசாலித்தனமாக இருந்தது. இது பெருமைப்பட வேண்டிய ஒன்று. சூர்யகுமார்யாதவ் சிறப்பாக ஆடினார். இன்று அவரின் ஷாட்தேர்வு சரியானது. அவர் கடைசி வரை பேட்டிங் செய்ய விரும்பினோம். ஏனெனில் அவரால் வித்தியாசமாக ஷாட்டுகளை அடிக்க முடியும், என்றார்.

ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறுகையில், ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழப்பது உதவாது. கடந்த 3 போட்டிகளில் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெறமுடியவில்லை. பட்லர், ஆர்ச்சர் போராடி பார்த்தனர். எங்கள் பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை. 10வது போட்டியில் தான் ஸ்டோக்ஸ் அணியில் இணைவார் என நினைக்கிறேன். அவர் வருவதற்கு முன் சில வெற்றிகளை பெறலாம் என நம்புகிறேன். தோல்வியால் அதிகம் பீதியடைய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த 3 போட்டிகளில் எங்கள் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. வரும் போட்டிகளில் அதை செய்ய வேண்டும், என்றார்.

கடைசி வரை பேட்டிங் செய்ய விரும்பினேன்

ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ் அளித்தபேட்டி: கடந்த ஆட்டங்களில் செய்த தவறை செய்யாமல் இன்று நான் கடைசிவரை பேட்டிங் செய்ய விரும்பினேன். நான் அதை செய்தேன். ஆப் சைடு அதிகம் அடித்து ஆடினேன். அணி வெற்றி பெற்றது உண்மையில் திருப்தி அளிக்கிறது. எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர், என்றார்.

Tags : Rajasthan ,Rohit Sharma ,interview ,Mumbai , Rajasthan tops list: I am proud of our fielding .. Mumbai captain Rohit Sharma interview
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...