×

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் 15 நிமிடத்தில் சீனாவை விரட்டி இருப்போம்: குருஷேத்ராவில் ராகுல்காந்தி ஆவேச பேச்சு

சண்டிகர்: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்திருந்தால் 15 நிமிடத்தில் சீனாவை விரட்டி இருப்போம் என்று குருஷேத்ராவில் நடந்த பேரணியில் ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார். மத்திய  அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 3 நாட்களாக விவசாயிகளின் டிராக்டர் பேரணியை நடத்தினார். நேற்று பஞ்சாபின் பெஹோவாவிலிருந்து  அரியானாவின் குருஷேத்ராவின் தானிய சந்தை அருகே நடந்த பேரணியில் ராகுல்காந்தி விவசாயிகள் மத்தியில் பேசியதாவது: பிரதமர் மோடி நாட்டை பலவீனப்படுத்தி உள்ளதால், லடாக் எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்தது.

இந்திய வீரர்களை சீன ராணுவம் கொல்லத் துணிந்தது. இந்த சூழலில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி இருந்திருந்தால், வெறும் 15 நிமிடங்களில் சீனாவை விரட்டி இருப்போம். சீனா எங்கள்  நாட்டிற்குள் நுழையவில்லை என்று மோடி கூறினார். ஆனால், நமது 20 வீரர்கள் எப்படி இறந்தார்கள். அவர்களைக் கொன்றது யார்? உலகம் முழுவதும் ஒரே ஒரு நாடு  மட்டுமே அதன் நிலத்தை இழந்துள்ளது. அதுதான் இந்தியா. பிரதமர்  மோடி தன்னை ஒரு தேசபக்தர் என்று அழைக்கிறார்.

சீன ராணுவம் நம் எல்லைக்குள் புகுந்தது நாட்டு மக்களுக்கு தெரியும். ஆனால், இவர்கள் எந்த வகையான தேசபக்தர்கள். சீன ராணுவம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே நமது எல்லைக்கு வந்துவிட்டது. அவர்களை வெளியேற்ற இன்னும்  எவ்வளவு நேரம் தேவைப்படும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவாகும் வரை சீன ராணுவம் நமது நாட்டை ஆக்கிரமிக்கும். ஆனால் விரைவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையும். அப்போது, சீனா வெளியேற்றப்படும்.  கடந்த 6 ஆண்டுகளில் மோடியின் எந்தக் கொள்கையாலும் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பயனடையவில்லை.

நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பலம் குறித்து பிரதமர் மோடிக்கு எதுவும் தெரியாது. அவர்கள் தங்கள் உருவ விளம்பரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் தங்களது புகைபடங்களை எடுத்து  வெளியிடுகிறார்கள். வெற்று சுரங்கப்பாதையில் அவர் கைகுலுக்குவதை நீங்கள் பார்த்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்’ என்று பேசினார்.

ஸ்மிருதி இரானிக்கு பதிலடி

வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அவர் சென்ற டிராக்டரில் சோபாவை போட்டு அமர்ந்து சென்றார். இதை மத்திய அமைச்சர் ஸ்மிருதி  இரானி உள்ளிட்டோர் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டிருந்தனர். இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், ‘என் நலம் விரும்பிகளில் ஒருவர், டிராக்டரில் சோபாவை  போட்டுள்ளார்.

ஆனால், பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக மக்கள் வரிப்பணம் ரூ.8 ஆயிரம் கோடிக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானம் வாங்கப்பட்டுள்ளது. அதில், சோபா மட்டுமின்றி, பிரதமரின் வசதிக்காக சொகுசு படுக்கைகளே உள்ளன.  அதையெல்லாம் ஏன் யாரும் பார்ப்பதும் இல்லை; கேள்வி கேட்பதும் இல்லை. தன்னுடைய நண்பர் டிரம்ப், அதேபோன்ற விமானத்தை வைத்திருப்பதால், மோடியும் கோடிக்கணக்கான ரூபாயை வீணடித்து இந்த விமானத்தை வாங்கி உள்ளார்’  என்று தெரிவித்துள்ளார்.



Tags : regime ,middle ,Congress ,speech ,China ,Kurukshetra ,Rahul Gandhi , Congress, regime, China, Kurukshetra, Rahul Gandhi
× RELATED நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா...