×

ஏலகிரி மலை நிலாவூர் சாலை அருகே சுடுகாட்டில் சடலம் புதைக்க எதிர்ப்பால் சாலை மறியல்: அதிகாரிகள் சமரசம்

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலை நிலாவூர் சாலை அருகே உள்ள சுடுகாட்டில் சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவிப்பதால் பொதுமக்கள் சாலை  மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள மேட்டுகணியூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவ்வாறு  வசிப்பவர்களில் வயது முதிர்வு மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலங்களை அவர்களுக்கு சொந்தமான நிலம் மற்றும் பொது  இடங்களில் புதைத்து வருகின்றனர். மேலும், ஒரு சிலர் அந்த ஊரில் இறப்பவர்களின் சடலங்களை புதைக்க நிலாவூர் செல்லும் சாலையில், நான்கரை ஏக்கருக்கு மேல் உள்ள அரசு  புறம்போக்கு இடத்தில் 5 தலைமுறைக்கும் மேலாக புதைத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் மேட்டுகணியூர் பகுதியில் வசித்து வந்த முதியவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது சடலத்தை நிலாவூர் சாலை  அருகே உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது, அந்தப்பகுதியில் வீட்டுமனைகளை வாங்கியவர்கள்,  சுடுகாட்டில் சடலங்களை புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

இதையடுத்து, விஏஓ அந்த இடம் சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்று கூறியபிறகு சடலத்தை அங்கு புதைத்தனர். மேலும், இது போன்ற  பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுடுகாட்டை சுற்றிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என  அப்போதிருந்த தாசில்தார் மற்றும் விஏஓவிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.   இந்நிலையில், நேற்று மேட்டுகணியூர் பகுதியில் வயது முதிர்வால் முதியவர் ஒருவர் இறந்தார். அவரின் சடலம் புதைக்க கொண்டு செல்லும்போது,  சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்களால், பிரச்னைகள் ஏற்படகூடாது என்பதற்காக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர்  திருப்பத்தூரிலிருந்து நிலாவூர் பகுதிக்கு வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏலகிரி மலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும்  விஏஓ மஸ்தான் ஆகியோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர்.இதையடுத்து போலீசார், பொதுமக்களிடம் இந்த இடம் சுடுகாட்டிற்கு சொந்தமானது. எனவே, இந்த இடத்தில் யாரும் சடலம் புதைக்க எதிர்ப்பு  தெரிவிக்கமாட்டார்கள் என்று கூறினர். இதையேற்று, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு  ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்த திருப்பத்தூர் தாசில்தார் மோகன், வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், விஏஓ மஸ்தான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து  விசாரணை மேற்கொண்டனர். இதையறிந்த அப்பகுதியினர், தாசில்தாரிடம் சுடுகாட்டு இடத்தை ஆய்வு செய்து எரி மேடை அமைக்கவும், வாகன வசதி  ஏற்படுத்தி தரவும் கோரிக்கை வைத்தனர்.

அப்போது தாசில்தார், சுடுகாட்டின் இடத்தை அளவீடு செய்து, அதன்பிறகு ஊராட்சிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் மற்றும்  எரிமேடை போன்றவற்றிக்கு நீங்கள் மனு அளித்து உங்கள் கோரிக்கைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.  இதையடுத்து, சுடுகாட்டின் இடத்தை அளவீடு செய்ய வருவாய் ஆய்வாளர் சிலம்பரசனுக்கு உத்தரவிட்டார்.

Tags : protest ,road ,crematorium ,Nilavur ,hill ,Yelagiri , Road blockade to bury corpse in crematorium near Yelagiri hill Nilavur road: Authorities compromise
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...