×

ரசாயனம் மூலம் வாழைப்பழங்கள் பழுக்க வைப்பு உணவுத்துறை அதிகாரிகள் மெத்தனம்

சூலூர்: சூலூர் அருகே குடோனில் பதுக்கி ரசாயனம் மூலம் வாழைப்பழங்கள் பழுக்க வைப்பது குறித்து விவசாயிகள் தகவல் கொடுத்தும்  உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளதாக விவசாயிகள் குற்றம்சட்டியுள்ளளனர். ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த ஏராளமான வாழை விவசாயிகளிடம் திருநெல்வேலியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் கடந்த சில  நாட்களுக்கு முன்  10 லட்சம் ரூபாய் மதிப்புடைய வாழைத்தார்களை வாங்கி கொண்டு விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல்   தலைமறைவாகிவிட்டார். கடந்த 4 மாதங்களாக தலைமறைவான வேல்முருகனை விவசாயிகள் பல்வேறு இடங்களில் தேடி  வந்துள்ளனர்.இந்நிலையில் சூலூர் அருகே கலங்கல் பகுதியில் வேல்முருகன் வாழைத்தார் குடோன் வைத்து நடத்தி வருவதாக ஏமாந்த  விவசாயிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நேற்று கலங்கல் பகுதியில் உள்ள குடோனுக்கு விவசாயிகள் வந்துள்ளனர். அங்கு  வேல்முருகன் இல்லாத நிலையில் அங்கு வாழைத்தார்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த ஊழியர்கள் 3 பேர் வாழைத்தார்களை, ரசாயனம் கலந்த நீரில் மூழ்கி எடுத்து பெட்டிகளில் அடுக்கி கொண்டு இருப்பதை பார்த்து  அதிர்ச்சியடைந்த விவசாயிகள், உணவுப் பாதுகாப்புத் துறைக்கும், சூலூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார், விவசாயிகளையும், குடோன்  ஊழியர்களையும் காவல் நிலையத்திற்கு வரச்சொல்லி விட்டு வந்துள்ளனர். விவசாயிகள் காவல் நிலையத்திற்கு வந்து காத்திருந்த நிலையில் குடோன் ஊழியர்கள் தலைமறைவாயினர். மேற்கொண்டு போலீசார் எந்த  நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரியிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் கலங்கல் கிராம  நிர்வாக அலுவலர் சத்தியபாமா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது குடோனில் இருந்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் கோவையில் உள்ள பிரபல அங்காடிகளுக்கு சப்ளை செய்வது  தெரியவந்தது. கொரோனா பரவி வரும் சூழலில் இதுபோன்ற அத்துமீறல் சம்பவத்தை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது விவசாயிகள்  மற்றும் பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Deposit ripening , Chemical ripening of bananas Food officials are complacent
× RELATED வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி...