×

கற்கள் பெயர்ந்து வாகனங்களை அச்சுறுத்தும் சாலை: 6 கிராம மக்கள் பாதிப்பு

இளையான்குடி:  இளையான்குடி அருகே போக்குவரத்துக்கு பயனற்ற தார்ச்சாலையால், ஆறு  கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இளையான்குடி-சிவகங்கை மெயின் சாலையிலிருந்து குன்டுகுளம், கொடிமங்கலம், நாகமுகுந்தன்குடி, இட்டிச்சேரி, முடவேலி, வழியாக தாயமங்கலம்  பிரதான சாலை கடும் சேதமடைந்துள்ளது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கும், குன்டுகுளம், நாகமுகுந்தன்குடி ஆகிய இடங்களில்  செயல்படும் பள்ளிகளுக்கும் சென்றுவர இந்த சாலையைத்தான் அப்பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2008ல் திமுக ஆட்சியில் போடப்பட்ட இந்த சாலையை, இதுவரை சீரமைக்கவோ, புதிய சாலை அமைக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை.  கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் உள்ள இந்த சாலையால், அவசர காலத்திற்கு ஆம்புலன்சும்  வருவதில்லை, டூவீலரில் சென்றாலும் பஞ்சர், விபத்து ஏற்படுகிறது என, 6 கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே சின்னாபின்னமாகி உள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குன்டுகுளம்,  கொடிமங்கலம், நாகமுகுந்தன்குடி, இட்டிச்சேரி, முடவேலி, தாயமங்கலம் ஆகிய கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் திமுக எம்எல்ஏ சுப.மதியரசன் கூறியதாவது, திமுக ஆட்சியில் 2008ல் புதிய தார்ச்சாலை போடப்பட்டதோடு சரி, இன்றுவரை  சீரமைக்கப்படவில்லை. இளையான்குடி பகுதியில் பயன்பாட்டில் உள்ள சாலையை தவிர்த்து, பயனற்ற சாலைக்கே முக்கியத்துவம் தருகின்றனர்.  போக்குவரத்துக்கு பயனற்ற இந்த குன்டுகுளம், தாயமங்கலம் சாலையால் ஆறு கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். கலெக்டர் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றார்.


Tags : Road , Road threatening stones and vehicles: 6 villagers affected
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...