×

லவ்டேல் பகுதியில் வேகத்தடைக்கு வர்ணம் பூசாததால் விபத்து அபாயம்

ஊட்டி:  ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் கண்ணுக்கு தெரியாத வேகத்தடையால் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.   ஊட்டியில் இருந்து 33 கி.மீ. தொலைவில் மஞ்சூர் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு செல்ல லவ்டேல் வழியாக நெடுஞ்சாலைத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள சாலை உள்ளது. இச்சாலையில் லவ்டேல் அருகே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரம் தடுப்புச்சுவர்  இல்லாததாலும், வேகத்தடை இல்லாததாலும் கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலியானார்.
இதனைத்தொடர்ந்து இச்சாலையில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. மேலும் அருகருகே இரு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் அண்மையில் இந்த வேகத்தடைகள் பெரிதாக உயர்த்தப்பட்டன. ஆனால் வர்ணம் பூசாததால், வேகத்தடைகள் இருப்பதே வாகன  ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள், அருகில் வந்தவுடன்தான் வேகத்தடை இருப்பது தெரிகிறது. உடனடியாக பிரேக்  பிடிக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. அதிலும் வேகமாக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள், இந்த வேகத்தடைகளால் கீேழ விழுந்து விடுகின்றனர். எனவே வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச வேண்டும். மேலும் இப்பகுதியில் பயணியர் நிழற்குடைக்கு அருகே  கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த ராட்சத மரத்துண்டுகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. இவற்றையும் அகற்ற வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : accident ,area ,Lovedale , In the Lovedale area Speed paint Risk of accident due to not applying
× RELATED கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி!!