×

கீழ்வழித்துணையாங்குப்பம் கே.வி.குப்பமானது சிலைகள் கிடைக்கும் அதிசய கிராமம்

கீழ்வழித்துணையாங்குப்பம், கீழ்வைத்தினாங்குப்பம் என்ற பெயர் மாறி, கே.வி.குப்பம் ஆனது. இப்பெயர் வரக்காரணம் ஆந்திர மாநிலம்  வெங்கடகிரிகோட்டைக்கு செல்வதற்காக கே.வி.குப்பம் பகுதிக்கு வந்த மன்னர்கள், வியாபாரிகள் வழி கேட்டார்களாம். அதேபோல் ஆம்பூர் அருகே உள்ள எம்.வி.குப்பம் பகுதியிலும் சில மன்னர்கள், வியாபாரிகள் வழி கேட்டு செல்வார்களாம். இதனால் கிழக்குப்பகுதியில்  இருந்து வருபவர்கள் வழி கேட்டதால் அவ்வூர் மேல்வழிதுணையாங்குப்பம் என்றும், இவ்வூர் கீழ்வழித்துணையாங்குப்பம் எனவும் பெயர் பெற்றது.இந்த பெயர் தற்போது கே.வி.குப்பம் என்று அனைவராலும் அறியப்படும் ஊராட்சி ஒன்றியம் ஆகும். இவ்வூராட்சியில் 2011 ஆண்டு கணக்கெடுப்பின்படி  1.28 லட்சம் மக்கள்  உள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியம் கே.வி.குப்பம். இதில் மொத்தம் 39 ஊராட்சிகள்  அடங்கியுள்ளன. காட்பாடி தாலுகாவில் இருந்த கே.வி.குப்பம் தனி தாலுகாவாக மாற்றப்பட்டது.இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். இந்த  தாலுகாவிற்கு ராஜாதோப்பு அணை, விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம், மேல்ஆலத்தூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், காவனூர் ரூசா  மருத்துவமனை, மகாதேவமலை கோயில் ஆகியவை இப்பகுதியின் சிறப்புகளாக உள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு மோர்தானா அணையிலிருந்து கால்வாய் வழியாக வரும் தண்ணீரை சேகரிக்கவே செஞ்சியில் ஒரு அணை கட்டப்பட்டது. அந்த  அணைதான் மாவட்டத்தின் 2வது பெரிய அணையான ராஜாதோப்பு அணை. இது அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த, தற்போதை  திமுக பொதுசெயலாளர் துரைமுருகனின் முயற்சியால் அமைந்தது.இந்த அணையின் மொத்த உயரம் 20.52 மீட்டர். அணையின் மொத்த கொள்ளளவு  282.700 மில்லியன் கன அடி. அணையில் நீர்வரத்து அதிகமானால் சுற்றியுள்ள கிராமங்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். ஆனால்  முறையான பராமரிப்பின்றி இதுநாள் வரை அணையின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை.கல்வி கண் திறந்த காமராஜர் கடந்த 1954ம் ஆண்டு குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவரது  தொகுதி நிதியிலிருந்து கே.வி.குப்பத்தில் சென்னாங்குப்பம் அருகே உள்ள இயற்கை புதூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  தொடங்கப்பட்டது. அந்த பள்ளி தற்போது பயன்பாட்டில் இல்லாமல் பூட்டப்பட்டுள்ளது.

கே.வி.குப்பம், வேப்பங்கனேரி, பி.கே.புரம் ஊராட்சிகளை சேர்ந்த 40 சதவீத மக்கள் மேல்மாயில் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 27  சென்ட் இடத்தில் உள்ள தற்காலிக சுடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம், தகனம் செய்து வருகின்றனர். இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வரத்துக்கால்வாய் அருகில் உள்ளதால் மழைக்காலங்களில் இறந்தவர்களை கொண்டு செல்லவதில் சிக்கல்  உள்ளது. எனவே, நிரந்தர சுடுகாடு வேண்டும் என்பது 30 ஆண்டுகால கோரிக்கை.
இதுகுறித்து அவ்வப்போது, எம்எல்ஏ, எம்பி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதேபோல் வாடகை கட்டிடத்தில்  இயங்கும் கே.வி.குப்பம் தபால் நிலைய கட்டிடத்திற்கு அரசு அதற்கென்று நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் அமைக்கவேண்டும்.கே.வி.குப்பம் பஜார் தெருவில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்களும், கடைகள், சார்பதிவாளர் அலுவலகம், தனியார் கல்வி நிலையங்கள், என்று   நடமாடும் முக்கிய இடமாகும். இவ்வழியாக செல்லும் கசம் கால்வாயை 10 ஆண்டுகளாகியும் தூர்வாரவில்லை.

ஊராட்சி நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை எரித்து விடுகின்றனர். இதனால்அம்பேத்கர் நகர், அவ்வை நகர் மக்கள் மூச்சுத்திணறல்,  சுவாசக்கோளாறால் பாதிக்கப்படுகின்றனர்.சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று பொதுமக்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.
கே.வி.குப்பம் பஸ்நிலையத்தை தரம் உயர்த்தி, கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். கே.வி.குப்பம் தாலுகாவிற்கு ஒரே ஒரு துணை மின்நிலையம்  வடுகந்தாங்கலில் உள்ளது. மற்றொரு துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்.தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கழிவறை வசதி ஏற்படுத்தும் திட்டமானது, தற்போது பயன்பாட்டில் இல்லை. கட்டண கழிவறை  கட்டாமலே கட்டியதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.கே.வி.குப்பம் தாலுகாவில் மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்ல சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வேலூர் வர  வேண்டியுள்ளது.  இல்லையெனில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குடியாத்தம் அரசு கல்லூரிக்கு செல்ல வேண்டும். வசதியுள்ளவர்கள்  காட்பாடி தனியார் கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.  எனவே கே.வி.குப்பத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடியாத்தம், காட்பாடி, அணைக்கட்டு தொகுதிகள் இணைக்கப்பட்ட நிலையில்  கே.வி.குப்பம் மட்டும் கைவிடப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. கே.வி.குப்பத்தை தனி தாலுகாவாக அறிவித்து ஓராண்டாகியும், தாலுகா  மருத்துவமனை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

முழுக்க முழுக்க கிராமங்களை மட்டுமே கொண்ட மிகவும் பின்தங்கிய கே.வி.குப்பம் வட்டாரத்துக்கு மோர்தானா அணையில் இருந்து ராஜாதோப்பு  அணைக்கு கட்டப்பட்ட கால்வாயை சரி செய்து வேப்பங்கனேரி, பில்லாந்திப்பட்டு, சின்ன வடுகந்தாங்கல், வடுகந்தாங்கல், பி.என்.பாளையம் ஏரிகளுக்கு  தண்ணீர் கொண்டுவர வேண்டும்.
கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வேளாண்துறை அலுவலகம் பி.ேக.புரத்தில் உள்ளது. சார்பதிவாளர்  அலுவலகம், பஜார் தெருவில் உள்ளது. காவல் நிலையம் சந்தை மேடு பகுதியில் உள்ளது. எனவே இந்த அலுவலகங்களுக்கு அருகாமையில்  வட்டாட்சியர் அலுவலகம் அமைந்தால் மக்களுக்கு அலைச்சல் இருக்காது.தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு காட்பாடி தொகுதி மற்றும் குடியாத்தம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகள் இணைத்து கே.வி.குப்பம் (தனி)  தொகுதி உருவாக்கப்பட்டது. மோர்தானா அணைதான் தொகுதியின் அடையாளமாக இருக்கிறது. இந்த தொகுதியானது காட்பாடி ஒன்றியத்தில் இருந்து 2 ஊராட்சிகளும், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் இருந்து 39 ஊராட்சிகளும், குடியாத்தம்  ஒன்றியத்தில் இருந்து 32 ஊராட்சிகளும் என மொத்தம் 73 ஊராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன. இவ்வாறு குளறுபடியாக உள்ள  இத்தொகுதியை மறுசீரமைக்க வேண்டும் என்றும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

ஜெ.விவேகானந்தன், கே.வி.குப்பம் திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்: கே.வி.குப்பம் பஜார் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்  தூர்வாராமல், கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. குடிநீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மாயில் முதல்  மேல்மாங்குப்பம், மூலகாங்குப்பம் சாலையில் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.  குடிநீருக்காக போராட்டங்களும், மறியல் நடத்தியும் நடவடிக்கை இல்லை. குடிநீர் பிரச்னை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரவீன், மாச்சனூர், சமூக ஆர்வலர்: கே.வி.குப்பத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும். இயற்கை வளங்களை  அழிக்க முயலும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீருக்கான அனைத்து மூலங்களும் சீராக உள்ள நிலையிலும் குடிநீர்  தட்டுப்பாடு தாலுகா முழுவதும் உள்ளது. கூடுதல் பஸ்கள் இயக்கி கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க  வேண்டும். ஊராட்சி நூலகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

கே.மோகன்ராஜ், பி.கே.புரம், மாவட்ட துணை செயலாளர் பா.ம.க: மகாதேவமலை கோயிலை சுற்றுலா தலமாக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சார்ந்த  அலுவலகங்கள் ஒரே இடத்தில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். ரயில்களை காவனூரில் நிறுத்த வேண்டும். கே.வி.குப்பம் தொகுதியை மறுசீரமைக்க  வேண்டும். பி.கே.புரம் முதல் ரூசா மருத்துவமனைக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தி இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும்.

Tags : village ,Kizhvazhithunayankuppam KV Kuppam ,idols , KV Kuppam is a wonder village where idols are available
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...