சிவகிரி பெரியகுளம் கண்மாய் மடையை சொந்த செலவில் சீரமைக்கும் விவசாயிகள்

சிவகிரி:  சிவகிரியில் சேதமடைந்த விஸ்வநாதப்பேரி பெரியகுளம் கண்மாயை சொந்த செலவில் சீரமைக்கும் பணியில் பாசன விவசாயிகள்  ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரியில் விஸ்வநாதப்பேரி பெரியகுளம் 376 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன்வாயிலாக 1110 ஏக்கர் நிலம் பாசனம்  பெறுகிறது. இக்குளத்தில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் கண்மாய் சின்னமடை மேட்டுப் பகுதியில் முறையான பராமரிப்பின்றி  பழுதானது. இதனால் விளைநிலத்திற்கு போதிய அளவு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு கண்மாய் பகுதியில் அமைந்த தொட்டியும்  உடைந்து சேதமடைந்தது. மேலும் பல்வேறு மடைகளும் பாழாகின. இவற்றைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர் மற்றும்  பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

  இதையடுத்து தாங்களே சீரமைக்க பாசன விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி பெரியகுளம் நீர்நிலை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்கத்  தலைவர் அய்யாச்சாமி, செயலாளர் மருதராஜ், பொருளாளர் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தாங்களாகவே ரூ.2 லட்சம்  வரை திரட்டி இப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.  இதனிடையே மடை திறப்பு சாவி உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக தனி அறை கட்ட வேண்டும். அத்துடன் இதற்கு தேவையான  நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>