×

2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெறப்போவதில்லை : முத்தரசன் தாக்கு

தஞ்சை, : அதிமுக வரும் தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை. இருவரும் இல்லாத ஒன்றிற்கு, சண்டை போடுகிறார்கள் என முத்தரசன் தெரிவித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: உபியில் தலித் இளம்பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு பிரதமரும், முதல்வரும் கருத்து கூறாமல் மவுனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது. பாஜக அதிக பெரும்பான்மையுடன் இருக்கும் காரணத்தால் ஆணவத்துடன் நடந்து வருவது ஜனநாயத்திற்கு நல்லதல்ல. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெறக்கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் வரும் 12ம் தேதி மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

இதேபோல் அகில இந்திய அளவில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நவம்பர் மாதம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்துவதையும் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரிக்கிறது.டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இந்தாண்டு அதிக அளவில் உள்ளது. குறுவை நெல்லில் ஈரப்பதம் இருப்பதால், விவசாயிகளால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் நெருக்கடியில் உள்ளனர். விவசாயிகளிடமிருந்து பல்வேறு காரணங்களால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையத்தை தேவைகேற்ப திறக்க வேண்டும்.

முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இடையே பிரச்னை எப்படி உருவானது, எப்படி முடியப்போகிறது என்பது பிரதமர் மோடிக்கு தான் தெரியும். முதல்வர் வேட்பாளர் குறித்து இருவருக்குள் நடைபெறும் காரசார விவாதத்தை பற்றி பாஜகவிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக வரும் தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை. இருவரும் இல்லாத ஒன்றிற்கு, சண்டை போடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.Tags : AIADMK ,attack ,Tamil Nadu ,assembly elections , Tamil Nadu Assembly, Election, AIADMK, Victory, Mutharasan, Attack
× RELATED அதிமுக - பாஜக கூட்டணியை தமிழக மக்கள்...