×

அரசுப் பள்ளி Vs தனியார் பள்ளி!

நன்றி குங்குமம்

இந்தியக் கல்வி அமைப்பைப் பற்றிய முக்கியமான இந்திப் படம் ‘பரீக்‌ஷா’. சமீபத்தில் நேரடியாக ‘ஜீ 5’ல் வெளியாகி பாராட்டுகளை அள்ளுகிறது.
ராஞ்சியில் ரிக்‌ஷா ஓட்டுபவர் புச்சி. அவரது மனைவிக்கு பாத்திரங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை. மகன் புல்புல் அரசுப் பள்ளியில் படிக்கிறான். படிப்பில் டாப் மாணவன். சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் சில குழந்தைகளைக் காலையில் பள்ளிக்கு அழைத்துச் சென்று மாலையில் வீட்டுக்குத் திரும்ப கூட்டி வருவது புச்சியின் தினசரி வேலை. அந்தப் பள்ளியில் எப்படியாவது தனது பையனைச் சேர்த்துவிட வேண்டும் என்பது அவரின் கனவு. அங்கே படித்தால்தான் புல்புல் நல்ல நிலைக்கு வருவான்.... அரசாங்கப் பள்ளியில் படித்தால் தன்னைப் போலவே ரிக்‌ஷாதான் ஓட்டவேண்டும் என்று நினைக்கிறார் புச்சி. ஒருநாள் வாடிக்கையாளர் ஒருவர் ரிக்‌ஷாவில் பணத்தை தவறவிட்டு விடுகிறார். அந்தப் பணம், மகனைத் தனியார் பள்ளியில் சேர்க்க கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்கும் புச்சி, புல்புல்லை அரசுப் பள்ளியிலிருந்து நிறுத்துகிறார். ரிக்‌ஷா ஓட்டுநரால் எப்படி  இவ்வளவு கட்டணம் செலுத்த முடியும் என்று தனியார் பள்ளியில் அட்மிஷன் மறுக்கப்படுகிறது. பிரின்சிபலின் காலைப் பிடித்து மகனை பத்தாம் வகுப்பில் சேர்த்து விடுகிறார். தாய்மொழியில் கல்வி கற்ற புல்புல்லுக்கு ஆங்கிலம் தடுமாறுகிறது. உடன் படிக்கும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் அவமதிக்கப்படுகிறான். அத்துடன் 40 ஆயிரம், 50 ஆயிரம் கட்டச் சொல்லி பள்ளி நிர்வாகம் புச்சியை அலைக்கழிக்கிறது.

இரவு பகலாக ரிக்‌ஷா ஓட்டினாலும் கட்டணம் செலுத்த முடியவில்லை. மகனின் கல்விக்காக திருட ஆரம்பிக்கிறார் புச்சி. திருடிய பொருளைத் தனக்குத் தெரிந்தவரிடம் விற்று கட்டணம் செலுத்துகிறார். ஒருநாள் திருடும்போது வசமாக புச்சி மாட்டிவிட, எல்லாமே தலைகீழாகிறது. திருட்டுப் பணத்தில் கட்டணம் செலுத்திப் படிக்கும் புல்புல்லை தேர்வு எழுத தடுக்கிறது பள்ளி நிர்வாகம். இந்நிலையில் அரசுப் பள்ளியில் படித்து ஐபிஎஸ் அதிகாரியான ஒருவர் புல்புல் தொடர்ந்து கல்வி கற்க உதவுகிறார். புல்புல்லின் இடத்துக்கே சென்று அவனைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு இரவு நேரங்களில் பாடம் நடத்துகிறார். அப்போது அவர் சந்திக்கும் சிக்கல்களும், புல்புல் தேர்வு எழுதினானா என்பதுமே க்ளைமேக்ஸ். பெரும்பாலான இந்தியப் பெற்றோர்களின் இங்கிலீஷ் மீடிய மோகத்தை தோலுரித்துக் காட்டும் இந்தப் படம், பீகாரில் ஏழை மாணவர்கள் ஐஐடியில் சேர்வதற்கு இலவசமாக கோச்சிங் கொடுத்த ஐபிஎஸ் அதிகாரி அபயானந்தின் சேவையைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இயக்குநர் பிரகாஷ் ஜா. புச்சியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார் தேசிய விருது வாங்கிய நடிகர் அதில் ஹுசைன்.

தொகுப்பு: த.சக்திவேல்


Tags : School Vs Private School , Government School Vs Private School!
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...