×

எதிரிகள், துரோகிகள் புறமுதுகிட்டு ஓடும் வகையில் 2021-ல் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம் : அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!!

சென்னை : பாரபட்சமின்றி ஒருமித்த கருத்துடன் தான் 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இதனை அறிவித்தார். அதே போல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு பின் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அப்போது அமைச்சர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று புதன் பொன்னான நாள். அதிமுக தொண்டர்களும் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்த அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கு இன்று பதில் கிடைத்துள்ளது. அதிமுக தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சி கொள்ள கூடிய வகையில் ஒருமித்த கருத்தாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். எதிரிகள், துரோகிகள் புறமுதுகை காட்டி ஓடும் வகையில் புதிய புறநானூற்றை அதிமுக படைக்கும். 2021-ல் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம், என்றார். தொடர்ந்து பேசிய அவர், ” பாரபட்சமின்றி ஒருமித்த கருத்துடன் தான் 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. குளிர் காயலாம் என்ற எதிரிகளின் நினைப்பில் மண் விழுந்தது” என்று தெரிவித்தார்.

Tags : Jayakumar ,traitors ,MGR-Jayalalithaa , Central Government, Department of Archeology, High Classical, Tamil Neglect, Vaiko, Condemnation...
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...