சொத்து குவிப்பு வழக்கு டி.கே சிவகுமாருக்கு சி.பி.ஐ நோட்டீஸ்: இரண்டு நாட்களில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

பெங்களூரு: சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக பதிவான வழக்கு தொடர்பாக இரண்டு நாட்களில் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ தரப்பில் டி.கே சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் மீது 2017ம் ஆண்டில் இருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 2019ம் ஆண்டு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் டி.கே சிவகுமாரின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.8 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். மேலும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதில் ரூ.75 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு முறையான கணக்கு இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து இந்த விவகாரம் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை டி.கே சிவகுமாருக்கு சொந்தமான டெல்லி, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் இருந்த வீடு, அலுவலகம் உள்பட 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.57 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கியது. மேலும் இது தொடர்பாக அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த அதிகாரிகள், சிவகுமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக நேற்று அவருக்கு சி.பி.ஐ தரப்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதில் 2 நாட்களில் பெங்களூருவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகவேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. சிவகுமாரை கைது செய்யும் நோக்குடன் சி.பி.ஐ அதிகாரிகள் முயற்சி ஏற்படுவதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>