×

சூரியகுமார் அதிரடி ஆட்டம் ராயல்சுக்கு 194 ரன் இலக்கு

அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 194 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியில் அறிமுக வேகம் கார்த்திக் தியாகி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அங்கித் ராஜ்பூத் இடம் பெற்றனர். டி காக், கேப்டன் ரோகித் இருவரும் மும்பை இன்னிங்சை தொடங்கினர். துடிப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவரில் 49 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. டி காக் 23 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி தியாகி பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட்டார். ரோகித் 35 ரன் எடுத்து (23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கோபால் பந்துவீச்சில் திவாதியா வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த இஷான் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். குருணல் பாண்டியா 12 ரன் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் கோபால் வசம் பிடிபட்டார். அதிரடியாக விளையாடிய சூரியகுமார் 33 பந்தில் அரை சதம் அடித்தார். கடைசி கட்டத்தில் சூரியகுமார் - ஹர்திக் இணைந்து ராஜஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தனர். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. சூரியகுமார் 79 ரன் (47 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் 30 ரன்னுடன் (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் கோபால் 2, ஆர்ச்சர், தியாகி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 20 ஓவரில் 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.


Tags : Suriyakumar ,Royals , Suriyakumar Action Game Royals 194
× RELATED ரைடர்ஸ் Vs ராயல்ஸ்: ஈடன் கார்டனில் இன்று 1 மற்றும் 2 மோதல்