×

2020க்கான முதல் மற்றும் இறுதி எச்சரிக்கை... அஷ்வின் உறுதி

துபாய்: பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் வீரர் ஆரோன் பிஞ்ச்சை ‘மன்கடிங்’ முறையில் அவுட் செய்யும் வாய்ப்பு இருந்தும் அப்படிச் செய்யாத அஷ்வின், ‘அடுத்த முறை இப்படி கண்டுகொள்ளாமல் இருக்க மாட்டேன்’ என்று எச்சரித்துள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின்  ஸ்பின்னர் அஷ்வின் ரவிச்சந்திரன். போன சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி ஒன்றில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரை மன்கடிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதாவது பந்து வீச்சாளர் முனையில் இருந்த பட்லர் பந்து வீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியில் ரன்னுக்காக ஓடும் நிலையில் இருந்தார். அதனால் அவரை மன்கடிங் முறையில் ஸ்டம்புகளை தட்டிவிட்டு அவுட்டாக்கினார் அஷ்வின்.

அது ஐசிசி விதிகளின்படி சரி என்பதால் பலரும் அஷ்வினின் செயலை வரவேற்றனர். ஆனால், ஒரு சிலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். நேர்மையான செயல் இல்லை என்று கண்டித்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்து வந்த அஷ்வின், ‘நான் ஐசிசி விதிகளில் உள்ளபடிதான் செய்தேன். அது தவறு என்றால் விதிகளை மாற்றுங்கள். பந்துவீச்சாளர்கள் தவறு செய்தால் நோ பால், வைடு போன்றவை அளிக்கப்படுகிறது.  அதேபோல் பந்து வீசும் முன் கிரீசை விட்டு வெளியேறும்  பேட்ஸ்மேன்களுக்கும் தண்டனை அளிக்க வேண்டும்’ என்று கூறினார்.

இது குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் உடன் அஷ்வின் விவாதித்தார். அப்போது பான்டிங், ‘மன்கடிங் முறையில் வீரர்களை ஆட்டமிழக்க செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்த பேட்ஸ்மேன்களுக்கு ரன் குறைப்பு செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் பெங்களூர் அணியை எதிர்த்து டெல்லி விளையாடியது. அதில் 2வது இன்னிங்சின் 3வது ஓவரை அஷ்வின் வீசிக் கொண்டிருந்தார். படிக்கல் அதனை எதிர்கொண்டார். அந்த ஓவரின் 3வது பந்தை வீசத் தயாரானபோது, ஆடாத முனையில் இருந்த ஆரோன் பிஞ்ச் கிரீசை விட்டு வெகுதூரம் சென்று ஓடத் தயாராக இருந்தார். அதைபார்த்தும் பிஞ்ச்சை ஆட்டமிழக்க செய்யாமல் லேசான புன்னகையுடன் அஷ்வின் பந்து வீசினார்.

அதை தொலைக்காட்சியில் பார்த்த பலரும்,  அஷ்வின் மாறிவிட்டாரா அல்லது அவரது பயிற்சியாளர் பான்டிங், ‘பேட்ஸ்மேனை எச்சரித்தால் போதும்’ என்று கட்டாயப்படுத்தினாரா என்று யூகங்களை பறக்கவிட்டனர். அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘2020க்கான முதல் மற்றும் இறுதி எச்சரிக்கை. நான் அதை அதிகாரப்பூர்வமாக செய்கிறேன். அப்புறம் என்னை குறை கூற வேண்டாம்’ என்று போட்டிக்கு பிறகு கருத்து தெரிவித்துள்ளார். ஆக அஷ்வின் மாறவில்லை.... விதிகளின்படி காத்திருக்கிறார். அதனால் யார் அடுத்த பட்லர் என்பதுதான் புதிய கேள்வி.

Tags : Ashwin , First and final warning for 2020 ... Ashwin confirms
× RELATED புயல் எச்சரிக்கையை தொடர்ந்து