×

ஊரடங்கு தளர்வுகள் அறிவித்தும் பலனில்லை கிராமங்களில் வேலையின்மை 8 சதவீதமாக உயர்வு: 2ம் காலாண்டின் ஜிடிபி -12 சதவீதமாக சரிய வாய்ப்பு

புதுடெல்லி: ஊரடங்கு தளர்வுகளால் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கினாலும், வேலையில்லாத் திண்டாட்டம் குறையவில்லை. கிராமப்பகுதிகளில் வேலையின்மை சதவீதம் 5.8 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் நிறுவனங்கள், தொழில்துறைகள் முடங்கியதால் ஏராளமானோர் வேலை இழந்தனர். வருவாய் இன்றி பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. நகரங்களில் பிழைப்பு நடத்திவந்த சிறிய தொழில் முனைவோர் பலர், தங்கள் தொழிலை விட்டு விட்டு சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் செல்லும் அளவுக்கு வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதை அடியொற்றி, மாநிலங்களில் சில மாறுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வால் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த செப்டம்பரில், ஏற்றுமதி, சரக்குப் போக்குவரத்து, இ-வே பில்கள் அதிகரித்துள்ளன. இதற்கேற்ப, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜிஎஸ்டி வருவாயும் உயர்ந்துள்ளது. கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவர ஆய்வுகளின்படி, முந்தைய வாரத்தில் 81.6 சதவீதமாக இருந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கான குறியீட்டுப் புள்ளி, 82.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, செப்டம்பர் மாதத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் காணப்பட்ட முன்னேற்றம், அக்டோபரில் மேலும் உயர்ந்து நீடித்து வருகிறது என நோமுரா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சரக்குப் போக்குவரத்தை பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 94.63 மில்லியன் டன் கையளப்பட்ட நிலையில், கடந்த மாதம் 102.13 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. நிலையான மற்றும் படிப்படியான பொருளாதார மீட்சிக்கு இத்தகைய வர்த்தக நடவடிக்கைகள் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வேலைவாய்ப்பில் முன்னேற்றம் இல்லை. மாறாக, வேலையின்மை அதிகரித்துள்ளது. கிராமப்பகுதிகளில் வேலையின்மை 5.8 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது என நோமுராவின் வாராந்திர ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதுபோல், கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில், பொருளாதாரம் -12 சதவீதமாக சரியும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

Tags : areas , Unemployment in rural areas rises to 8 percent: Second quarter GDP likely to slide to 12 percent
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்