×

சென்னையில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு: கட்டுப்பாடு பகுதி 42ஆக உயர்வு

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் வரை தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் பதிவாகியது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவது தெரியவருகிறது. நோய் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த மாதம் தொற்று குறைந்து காணப்பட்டதால், கட்டுப்பாடு பகுதிகளே இல்லை என்று கடந்த 18ம் தேதி மாநகராட்சி அறிவித்தது.

இதை தொடர்ந்து தொற்று அதிகரிக்க தொடங்கியதால் கட்டுப்பாடு பகுதிகளும் அதிகரிக்க தொடங்கியது. இதன்படி கடந்த 2ம் தேதி நிலவரப்படி சென்னையில் 10 கட்டுப்பாடு பகுதிகள் இருந்தன. நேற்று முன்தினம் நிலவரப்படி சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 36 ஆக இருந்தது. இது நேற்று 42ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் சென்னையில் தினசரி 10 முதல் 20 பேர் மட்டுமே மரணமடைந்தனர். ஆனால் சில நாட்களாக சென்னையில் தினசரி 20க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து வருகின்றனர். கடந்த 3ம் தேதி 21 பேரும், 5ம் தேதி 19ம் பேரும், நேற்று 25 பேரும் மரணமடைந்துள்ளனர். சென்னையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்றும், மரணமும் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags : deaths ,area ,Chennai , Increase in the number of corona daily casualties spreading rapidly again in Chennai: control area rises to 42
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...