காசிமேடு துறைமுகத்தில் மீனவர் சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு வலை

தண்டையார்பேட்டை: காசிமேடு துறைமுகத்தில் மர்ம கும்பலால் மீனவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்த மீனவர்கள் உடனடியாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்த மீனவர் சுடர்மணி (34) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டாக மனைவியை பிரிந்து வசித்து வந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற சுடர்மணி, நேற்று முன்தினம் காலை தான் கரைக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் மது அருந்த காசிமேடு கடற்கரைக்கு சென்றபோது, மர்ம கும்பல் இவரை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>