×

வழக்கறிஞர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் 8 பேர் சரண்

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், வாணியம்பாடி கோர்ட்டில் 8 பேர் சரணடைந்தனர். சென்னை வில்லிவாக்கம், மேட்டு தெரு லேன் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (38), வழக்கறிஞர். இவர் ‘மக்கள் ஆளும் அரசியல் கட்சி’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியுள்ளார். இவரது மனைவி ரம்யா, அக்கட்சியின் நிறுவனராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ராஜேஷ், கடந்த 4ம் தேதி வில்லிவாக்கம் மோகன் ரெட்டி மருத்துவமனை அருகே நடந்து சென்றபோது, அவரை பின்தொடர்ந்த மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி ராஜேஷை சரமாரியாக வெட்டியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற ஓடிவந்த எம்டிஎச் ரோட்டை சேர்ந்த திருமுருகன் என்பவரையும் கும்பல் வெட்டியது. இதில், ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருமுருகனுக்கு கையில் வெட்டு விழுந்தது.
தகவலறிந்த வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணாநகர் துணை கமிஷனர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் (30), அருண் (22), ருக்கேஷ்வரன் (19), சஞ்சய் (21), கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ் (22), ஸ்ரீநாத் (21), திருநெல்வேலியை சேர்ந்த வைரமணி (20), திருவள்ளூரை சேர்ந்த கிஷோர்குமார் (26) ஆகிய 8 பேர், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளிமுத்துவேல் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். அவர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் செவிலியர்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அனைவரும் நாளை மறுதினம் மீண்டும் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி காளி முத்துவேல் உத்தரவிட்டார். தொடர்ந்து 8 பேரையும் உடல் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார், பின்னர் வாணியம்பாடி கிளைச்சிறையில் அடைத்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : court , 8 people surrender in court in lawyer murder case
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...