×

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் உடனே நீக்கப்படும்: ராகுல் உறுதி

சானூர்: ‘‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், வேளாண் சட்டங்கள் உடனடியாக நீக்கப்படும்’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் 3 நாட்கள் தொடர் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாப் மாநிலம், மோகாவில் தனது டிராக்டர் பேரணியைத் தொடங்கிய ராகுல், நேற்று முன்தினம் சங்க்ரூர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்துகொண்டார். இந்நிலையில், டிராக்டர் பேரணியின் இறுதி நாளான நேற்று ராகுல் காந்தி பாட்டியாலாவில், சானூர் நகரில் நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்று பேசியதாவது:

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், விவசாயிகள், தொழிலாளர்கள் சில கார்பரேட் நிறுவனங்களின் அடிமையாக்கப்படுவார்கள். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், அவர்களுடைய நிலங்கள் குறிப்பிட்ட சில பெரு நிறுவனங்களால் அபகரித்து கொள்ளப்படும். பின்னொரு நாளில், நிலங்கள் அபகரிக்கப்படும் என அன்றே ராகுல் காந்தியும், அமரீந்தர் சிங்கும் சொன்னார்களே என்று வருந்துவீர்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் விவசாய பெருமக்கள், தொழிலாளர்களுடையது மட்டுமல்ல, இந்தியாவின் போராகும். தகுந்த நடவடிக்கை எடுக்க இதுவே சரியான தருணம். இன்னும் 6 மாதம் அல்லது ஒரு வருடம் செல்லட்டும் என காத்திருந்தால் பயனில்லை.

இந்த புதிய சட்டங்கள் அமலுக்கு வந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டால், நாட்டின் உணவு பாதுகாப்பு பிரச்னைக்குரியதாகி விடும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், இந்தியா மீண்டும் ஒரு அடிமை நாடாக மாற்றம் பெறும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கார்பரேட் நிறுவனங்கள் நிர்ணயிப்பதே விலையாகி விடும். நிலங்கள் அபகரிக்கப்பட்டால், அவை மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகளாக்கப்படும். காங்கிரஸ் இதனை ஒருபோதும் அனுமதிக்காது. காங்கிரஸ் இந்த போரில் இருந்து ஒரு அடி கூட பின் வாங்காது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இந்த சட்டங்கள் அனைத்தும் உடனடியாக நீக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* அரியானா அரசு அனுமதி
பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து அரியானாவிலும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை தெரிவித்திருந்தது. இதனால் போராட்டம் நடத்த கூட்டமாக வந்தால் அனுமதிக்கப்படாது என்று அம்மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில், பஞ்சாபில் 3 நாள் டிராக்டர் பேரணிக்கு தலைமைத் தாங்கிய ராகுல் காந்தி நேற்று அரியானா நோக்கி சென்றார். ஆனால் ராகுலும், தொண்டர்களும் அரியானா எல்லையிலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பிறகு, அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Congress ,Rahul , Agriculture laws to be repealed as soon as Congress comes to power: Rahul
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...