×

சபரிமலை மண்டல பூஜைக்கு ஒருநாளில் 1,000 பேருக்கு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நவம்பர் 16ம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்த நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள், பக்தர்களை அனுமதிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆய்வு செய்ய, கேரள தலைமைச்செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்தால் கொரோனா நிபந்தனைகளை பின்பற்ற முடியாது என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலக்கல் அல்லது பம்பையில் ஆன்டிஜன் பரிசோதனை வசதி ஏற்படுத்த தயார் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்தது. இதையடுத்து குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:
* இந்த ஆண்டு ஆன்லைன்மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.
* முன்பதிவு செய்யும்போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இணைத்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முன் பதிவு செய்யும்போது 48 மணி நேரத்திற்கு முன் நடத்திய பரிசோதனை சான்றிதழை இணைக்கவேண்டும். மேலும் கேரள அரசின் கோவிட் 19 கேரளா ஜாக்கிரதா என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.
* நிலக்கல்லில் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்படும். இதற்கு பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
* தரிசனத்திற்கு பம்பை வழியாக மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி. எருமேலி, புல்மேடு உட்பட அனைத்து பாரம்பரிய பாதைகளும் மூடப்படும்.
* பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி இல்லை. பம்பை, சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க முடியாது.நெய் அபிஷேகம் நடத்தலாம்.
* மண்டல காலத்தின் துவக்கத்தில் ஒரு நாளில் 1000 பேரும், சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த கட்டத்தில் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறினார். அதே சமயம், ஐப்பசி மாத  பூஜைகளின்போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தேசவம்போர்டு தெரிவித்துள்ளது.

Tags : Sabarimala Mandala Puja , Sabarimala Mandala Puja allowed for 1,000 people a day
× RELATED சபரிமலை மண்டல பூஜைக்கு வெளிமாநில...