×

பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதல்வர் தான் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக கட்டிடத்தில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது :பள்ளிகள் தற்போது திறப்பதைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். எனவே, பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல. பள்ளிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறையுடன் ஆலோசித்த பிறகே முதல்வர் முடிவு எடுப்பார். தற்போது காரைக்காலில் பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து ஆலோசனை பெறலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

அதுவும் நடக்குமா என்பது தெரியவில்லை. சில நாடுகளில் பள்ளிகளை திறந்து மீண்டும் மூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்பாக உள்ளாட்சித் துறையின் உதவியுடன் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் 300க்கும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினரின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. அதை தொடர்ந்து மண்டல அளவில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். அந்த கருத்துகளின் அடிப்படையில் தான் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து அரசு முடிவெடுக்கும்.

Tags : schools ,Senkottayan , When do schools open? Interview with Minister Senkottayan
× RELATED ஜனவரியில் பள்ளிகள் திறப்பு?