×

தொழிலதிபர் வீட்டில் 250 சவரன் கொள்ளை விவகாரம் அதிமுக பிரமுகர் ஆலன் உட்பட 8 பேர் கைது: முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலை

சென்னை: தொழிலதிபர் வீட்டில் 250 சவரன் நகையை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் ஆலன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மொய்தீனை தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் சாரதாம்பாள் தெருவை சேர்ந்தவர் நூரூல் யாகூப் (70). தொழிலதிபரான இவர், தனது மனைவி ஹனிஷாவுடன் வசித்து வருகிறார். கொரோனா காரணமாக தொழிலதிபர் தன்னை வீட்டிலேயே தனிப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி மாலை இவரது வீட்டிற்குள் புகுந்த 8 பேர் கொண்ட முகமூடி கும்பல் கத்தி முனையில் கார் ஓட்டுனர், தொழிலதிபர், அவரது மனைவி உட்பட 4 பேரையும் கட்டி போட்டுவிட்டு பீரோவில் வைத்திருந்த 250 சவரன் தங்க நகைகள், ரூ.95 ஆயிரம் பணம், செல்போன் மற்றும் காரை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து தொழிலதிபர் மற்றும் அவரது உறவினர் முஸ்தபா கொடுத்த புகாரின்படி, பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தொழிலதிபர் நூரூல் யாகூப் சகோதரி மகன் மொய்தீன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் அதிமுக 117வது வட்ட இளைஞர் எழுச்சி பாசறை பகுதி செயலாளர் ஆலன் (39), போரூர் பகுதியை சேர்ந்த விஜய் (38), வண்டலூரை சேர்ந்த சுகுமார் (27), செங்கல்பட்டை சேர்ந்த லோகேஷ் (25), கூடுவாஞ்சேரியை சேர்ந்த மகேஷ் (33), கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தை சேர்ந்த தம்பிதுரை (40), ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த எல்லப்பன் (45), கோடம்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ்குமார் (25) என 8 பேரை செல்போன் சிக்னல் உதவியுடன் தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் நகை, பணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உறவினர் மொய்தீன் திட்டப்படி கொரோனா நேரத்தில் நகை மற்றும் பணத்திற்காக தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்தால் வெளியே தெரியாது என்ற நோக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. எனினும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி மொய்தீன் பிடிபட்டால் தான் கொள்ளை குறித்த முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Allen ,AIADMK ,businessman ,house ,shaving robbery , Eight people, including AIADMK leader Allen, arrested in connection with 250 shaving robberies at businessman's house: Police web for main culprit
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...