×

மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் முதல்வர் எடப்பாடி தொடங்கினார்

சென்னை: தமிழ்நாடு புதுமை நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் மற்றும் மெய்தோற்ற கைபேசி செயலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார். தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகம் கைவினைஞர்களின் கடுமையான உழைப்பினால் பித்தளை, பஞ்சலோகம், மரம், கல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த கைவினை பொருட்களை சந்தைப்படுத்துவதோடு, கைவினைஞர்களின் திறமையை மேம்படுத்த பயிற்சி அளித்தல், உற்பத்தி திறனை மேம்படுத்துதல், உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உயர்த்துதல், வடிவமைப்புகளில் புதுமையை ஊக்குவித்தல், கைவினைஞர்களுக்கு சமூக பொருளாதார பாதுகாப்பு அளித்தல் போன்றவற்றை முக்கிய குறிக்கோள்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த மெய்நிகர் தோற்ற தொழில் நுட்பத்தை விமான நிலையம், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் அமைத்து கைவினை பொருட்களை எளிதாக சந்தைப்படுத்த இயலும். குறிப்பாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நடத்தப்படும் கண்காட்சிகளில் மெய்நிகர் தோற்ற தொழில்நுட்பம் மூலம் அக்கைவினை பொருட்களை அந்த இடங்களுக்கு எடுத்து செல்லாமலே, அவற்றை முப்பரிமாண வடிவமைப்பில் வாடிக்கையாளர்கள் பார்த்து இணையதள வழியாக வாங்க கூடிய வசதி இதில் செய்யப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்பம் தமிழ்நாட்டு கைவினை பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த உறுதுணையாக இருக்கும். புதிய முயற்சியாக தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் மெய்தோற்ற கைப்பேசி செயலி மூலம், கைவினை பொருட்களை முப்பரிமாணத்தில் காட்சிப்படுத்தி, அலுவலகம், வீடு மற்றும் தேவைப்பட்ட இடங்களில் அலங்கரித்து காட்டி கைவினை பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து கைப்பேசி வாயிலாகவே விற்பனை ஆணைகளை பெறமுடியும்.

Tags : Chief Edappadi , The virtual look outlet was started by Chief Edappadi
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...