×

மேற்கு கடற்கரை சாலையில் பாறாங்கல் ஏற்றி செல்லும் லாரிகளால் ஆபத்து

நித்திரவிளை: குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவ கிராமங்களில் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக தினமும் ஏராளமான  டிப்பர் லாரிகளில் பாறாங்கல் மேற்கு கடற்கரை சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகளில் சாலை போக்குவரத்து துறை அனுமதித்ததை விட அதிகமான பாரத்தை ஆபத்தான நிலையில் ஏற்றி செல்கின்றனர். மேலும் இந்த லாரிகளில் நம்பர் பிளேட் இருக்காது. அதோடு அதிகமான டிரிப் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிவேகமாக லாரியை டிரைவர்கள் இயக்குகின்றனர். இதனால் இந்த லாரிகள் எதிரே வரும் போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மரண பயத்தில் தான் பயணிக்க வேண்டி உள்ளது.

இது சம்பந்தமாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிக  பாரத்துடன்  விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலை விதிகளை மீறி இயக்கப்படும்  இந்த லாரிகள் மீது மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மற்றும் குளச்சல் காவல் சரக போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : West Coast Road , Danger by trucks carrying boulder on the West Coast Road
× RELATED லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை