இந்தி மொழியில் தேர்ச்சி பெறாத வடமாநில தேர்வர்கள் தமிழில் அதிக மதிப்பெண் பெற்றது எப்படி?... அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

* தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பு

மதுரை: மத்திய அரசு பணி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை தேவை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதாவது சரவணன் கடந்த 2015-ம் ஆண்டு ஊட்டியில் உள்ள ஆயுத தொழிற்சாலைக்கு கெமிக்கல் பிராசசிங் பணிக்காக விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் அடிப்படியில் அவர் எழுத்து தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால் இவருக்கு மத்திய அரசின் பணி வழங்காமல் 40 மதிப்பெண்ணுக்கு கீழாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக சரவணன் உயர்நீதிமன்ர்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை தனி நீதிபதி விசாரணை செய்து தனக்கு அந்த கெமிக்கல் பணி வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் சார்பாக மேல்முறையீடு மனு இன்று தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு சரமாரி கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்னனர்.

குறிப்பாக மத்திய அரசு பணிகளில் மாநிலங்களில் நியமிக்கப்படும் போது அந்தந்த மாநில மொழி தொடர்புடையவர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும். இது சம்மந்தமாக கேள்விகள் எழுப்பினால் அதில் பல்வேறு அரசியல் நகர்வுகள் ஏற்படுகிறது. குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அங்கெ இந்தியில் படித்து தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் அவர்கள் தமிழகத்துக்கு வந்து தேர்வு எழுதி அதிலும் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று பணியில் அமர்த்தப்படுகின்றனர். இது எப்படி என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பான கேள்விகளை மத்திய மாநில அரசிடம் எழுப்பும் போது இது மத்திய, மாநில அரசுகளின் கொள்கை ரீதியான முடிவு என்று அறிவிப்பு வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் மின்வாரியம் மற்றும் ரயில்வே துறையில் தற்போது அதிக அளவில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதனால் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பணி கிடைக்காமல் போகிறது. இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். குறிப்பாக மத்திய அரசின் தேர்வு எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தலாம் அதை பத்தி நீதிமன்றத்துக்கு கவலை இல்லை. ஆனால் அவர்கள் நடத்தக்கூடிய தேர்வில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். நேர்மை இருக்க வேண்டும். ஒரு வெளிப்படைத்தலைமை இருக்க வேண்டும் என்று கருத்துக்களை கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

Related Stories:

>