பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தரமான உணவு வழங்கக்கோரி கொரோனா நோயாளிகள் உண்ணாவிரதம்: பேச்சுவார்த்தை நடத்த யாரும் வராததால் பரபரப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் 30 பேர் தங்களுக்கு தரமான உணவு வழங்கவில்லை எனக்கோரி இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வராததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனை கும்பகோணம் சாலையில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளும் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து உள்ள நிலையில் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 30 பேர் இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பெண்களும் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையிலேயே உணவு சமைத்து வழங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சாப்பாடு சரியில்லை என அவர்கள் புகார் தெரிவித்ததையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளனர். நேற்றும் உணவு சரியில்லை என கொரோனா நோயாளிகள் புகார் தெரிவித்தனர். நேற்றிரவு இட்லி வாங்கி கொடுத்த நிலையில் அது சரியாக வேகவில்லை என அவற்றை குப்பை தொட்டியில் போட்டுள்ளனர். இன்று காலையும் இட்லி சரியில்லை என புகார் தெரிவித்தனர். மேலும் சத்தான, சுகாதாரமான உணவு கிடைக்கும் வரையில் யாரும் சாப்பிடுவதில்லை என வார்டிலேயே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், இந்த மருத்துவமனையில் எங்களுக்கு சத்தான, சுகாதாரமான உணவு கொடுப்பதில்லை, டீ, மருந்து, மாத்திரைகள் சரியாக தருவதில்லை. கபசுர குடிநீர் கூட மிகவும் தாமதமாக தருகின்றனர். எனவே தரமான உணவு, மருந்து, மாத்திரைகள் வழங்கும்வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் யாரும் வராததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>