×

கேமரா வீடு

நன்றி குங்குமம் தோழி

செய்யும் தொழிலே தெய்வம் என்று கேள்விப்பட்டிருப்போம். ஒரு புகைப்படக் கலைஞர் அதை தன் வீட்டிற்கே கொண்டு வந்துவிட்டார். என்ன வீட்டில் வைத்து புகைப்படம் எடுக்கிறார் என்று எண்ணிவிடாதீர்கள். தான் வசிக்கும் வீட்டையே கேமரா வடிவில் கட்டி அதற்கு கிரகப்பிரவேசம் நடத்தி குடிபெயர்ந்துள்ளார்.

கேமரா லென்ஸ், பிலிம் ரோல், கிளிக், மெமரி கார்டு என ஒரு கேமராவில் உள்ள அத்தனை லட்சணங்களும் இந்த வீட்டில் இடம்பெற்றுள்ளது. கேமரா நிறுவனத்தின் பெயரான எப்சன் என்பதையும் தனது வீட்டுக்கு பெயராக சூட்டியுள்ளார். அந்த வீட்டின் சுவரில் புகைப்படத்துடன் தொடர்புடைய கிராபிக்ஸுகள் படமாக வரையப்பட்டுள்ளது. புகைப்படத்தின் மீதுள்ள தீராத காதல் தான் அந்த புகைப்படக்காரரை கேமரா போன்ற தோற்றத்தில் வீட்டை கட்டத் தூண்டியுள்ளது.
கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகரில் தான் இந்த வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டை கட்டி எழுப்பியுள்ள புகைப்படக்காரரின் பெயர் ரவி. இவரது மனைவி பெயர் கிருபா ஹொங்கல். இந்த தம்பதியினர் கேமரா அமைப்பில் மூன்று மாடி வீட்டை கட்டிஉள்ளனர்.

அத்துடன் விட்டாரா மனுஷன் தனது 3 பையன்களுக்கும் கேனான், எப்சன், நிகான் என கேமராக்களின் பெயரையே சூட்டியுள்ளார். இது தொடர்பாக ரவி் கூறுகையில், ‘‘கடந்த 1986ம் ஆண்டு  முதல் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். இந்த கட்டிடத்தை எழுப்பியதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. நாங்கள் இந்த வீட்டை கடன்வாங்கி தான் கட்டியுள்ளோம். இதற்காக நான் ஏற்கனவே வசித்த பூர்விக வீட்டை விற்று சில லட்சம் கடன் பெற்றும் இதை கட்டியுள்ளேன். இதற்காக நான் லட்சக்கணக்கில் கடன் பட்டிருந்தாலும் எனது பல ஆண்டு கால கனவு நனவாகியதில் மகிழ்ச்சி’’ என்கிறார் ரவி.

இவரது மூத்த மகன் கேனான் கூறுகையில், ‘‘எனது நண்பர்கள் எல்லாரும் எனது பெயரான கேனான் என்பது என்னுடைய செல்லப்பெயர் என்று தான் நினைத்துள்ளனர். ஒரு முறை என்னுடைய உண்மையான பெயரை கேட்ட போது நான் கேனான் என்றேன். ஆனால் அவன் நம்பவில்லை. எனது தந்தையின் தொழில் புகைப்படம் எடுத்தல் என்பதால் கேமரா மீதான காதலை எனக்கு பெயராக வைத்துள்ளார் என்றதும் தான் அறைகுறையாக எனது விளக்கத்தை அவன் ஏற்றுக்கொண்டான்’’ என்றான் கேனான்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Camera house
× RELATED தெற்கு ரயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில்...