×

ஊரடங்கு காலம்... அறுவடையான அவகேடோ பழங்களை விற்க முடியாமல் தவித்த மலைவாழ் விவசாயிகள்...

நன்றி குங்குமம்

களத்தில் இறங்கிய ஒர்க் ஃப்ரம் ஹோம் இளைஞர்கள்!

கொரோனாவின் கோர தாண்டவம் அடிப்படை வாழ்வாதா ரத்தையே அசைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக போதிய போக்குவரத்து இல்லாமை, கொள்முதல் இடையூறு என விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. எனில் மலைவாழ் விவசாயிகளின் வாழ்க்கை என்ன நிலையில் இருக்கும்? இதை அறிந்த திருச்சி இளைஞர்கள் களமிறங்கி மலைவாழ் மக்களின் கண்ணீரைத் துடைத்து வருகிறார்கள். ‘‘டிவி சேனல்கள், செய்திகள் வழியாதான் அவகேடோ பழங்கள் தேங்கி இருக்கறது தெரிஞ்சது. உடனே நானும் என் ஃபிரண்ட்ஸும் களம் இறங்கினோம்...’’ திருப்தியான மனநிலையுடன் பேசத் துவங்கினார் மனோஜ் தர்மர். ‘‘மேற்குத்தொடர்ச்சி மலை விவசாயிகள் இந்தக் கொரோனா பிரச்னை காரணமா அறுவடை செய்த அவகேடோ பழங்களை விற்க முடியாம கஷ்டப்படறாங்கன்னு செய்திகள்லதான் பார்த்தோம். அவகேடோ பழங்கள் அபாரமான சத்துகள் நிறைஞ்சது, அந்த பழங்கள் வீணாகப் போவதை எங்களால் பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை. என் நண்பர் சகாயராஜையும் இணைச்சுக்கிட்டேன். நேரடியா அவங்களைச் சந்திச்சு பழங்களை கொள்முதல் செய்தோம், திருச்சி மக்களுக்கு ஃபிரீ ஹோம் டெலிவரி செய்யலாம்னு இறங்கினோம்.

முகநூல் உட்பட எல்லா சமூக வலைத்தளங்களிலும் புரமோட் செய்ய ஆரம்பிச்சோம். சுமாரா 300 கிலோ பழங்கள். எந்த ஐடியாவும் இல்லாம சமூக வலைத்தளங்களை மட்டுமே நம்பி ஆரம்பிச்சோம். நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு ‘எங்களுக்கு பழங்கள் வேணும்’னு மக்கள் எங்களை தொடர்பு கொண்டாங்க...’’ என்னும் மனோஜ் தர்மருக்கு அடுத்தடுத்து ஆர்டர்கள் குவியத் துவங்கியிருக்கிறது. ‘‘ஆமா... டாக்டர்ஸ் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாங்க. காரணம் இதுல இருக்கற வைட்டமின்ஸ் சி, ஏ, கே மற்றும் 25க்கும் மேலான ஊட்டச்சத்துகள். கடைகள்ல, சூப்பர் மார்க்கெட்டுகள்ல வாங்கினா இந்தப் பழங்களின் விலை கூடுதலா இருக்கும். நாங்க மிகக் குறைந்த விலைல டோர் டெலிவரி செய்யறோம். மலைவாழ் மக்களுக்கு நாங்க செய்கிற உதவிகளைப் பார்த்துட்டு இன்னும் சில கிராம விவசாயிகள் எங்களைத் தொடர்பு கொண்டாங்க. ‘எங்களுக்கும் உதவுங்க’னு கேட்டாங்க.இந்த நேரத்துல இன்னும் சில நண்பர்கள், வேலை இல்லாமல் இருந்த சில தெரிந்த இளைஞர்கள் எங்களோடு கைகோர்க்க முன்வந்தாங்க. விளைவு... இப்ப நாங்க கொஞ்சம் பெரிய அளவுல செய்ய ஆரம்பிச்சிருக்கோம்.

தமிழகம் முழுக்க தேங்கிக் கிடக்குற பழங்கள், காய்கறி களை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கற வேலைல மும்முரமா ஈடுபட ஆரம்பிச்சுட்டோம்...’’ என்று சொல்லும் மனோஜ் தர்மரும் சகாயராஜும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். ஒர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் இந்த கொள்முதல் - விநியோகப் பணிகளில் இவர்களால் முழுமையாக ஈடுபட முடிகிறது. ‘‘ஆபீஸ் துவங்கிட்டா கொஞ்சம் சிரமம். ஸோ, எங்க நண்பர்கள் குழுவிலேயே இருக்கற பசங்க யாராவது வேலை இல்லாம இருந்தா... ஆர்வமா இறங்கி வேலை செய்கிற நோக்கம் கொண்டவர்களா இருந்தா... அவங்களுக்கு இதையே ஒரு ஸ்டார்ட்அப் பிஸினஸா கொடுத்திட லாம்னு  இருக்கோம். லாக்டவுனுக்குப் பிறகும் ஹோம் டெலிவரி நல்லாவே போகும். காரணம், நாங்க விவசாயிகள் சொல்கிற விலைலதான் ஹோம் டெலிவரி செய்கிறோம். இடைத்தரகர்கள் இல்லாததால விவசாயிகள் மகிழ்ச்சியா இருக்காங்க...’’ என்கிறார்கள் மனோஜ் தர்மரும் சகாயராஜும்.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

Tags : Hill farmers , Curfew ... Hill farmers unable to sell harvested avocados ...
× RELATED குளுகுளு கொடைக்கானலில் கிரீன்...