×

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர்கள் இல்லாததால் கர்ப்பிணிகள் நிலை திண்டாட்டம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர்கள் நியமிக்கப்படாததால் கர்ப்பிணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். உத்தமபாளையம் அரசு மருத்துவமனை தாலுகா அந்தஸ்து பெற்றுள்ளது. தினமும் 800 நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். 72 படுக்கை வசதியுடன் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மகப்பேறு பின் கவனிப்பு பிரிவு கட்டிடம் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதந்தோறும் 60 முதல் 70 பிரசவங்கள் நடப்பதுடன், 30 சிசேரியன் நடக்கும். இதனால் கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி இங்கு சிகிச்சைக்கு வருவார்கள். குறிப்பாக தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், உத்தமபாளையம் மற்றும் சுற்றிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கர்ப்பிணிகள் வந்து செல்ல வசதியாக இங்கு மகப்பேறு(டிஜிஓ) டாக்டர், மயக்கவியல், எம்.டி., டாக்டர்கள் பணியில் இருந்தனர்.

ஆனால், தற்போது முதுநிலை எம்.டி., இ.என்.டி., மயக்கவியல், உள்ளிட்ட டாக்டர்கள் புதிதாக பணிக்கு வந்துள்ளனர். ஆனால் மிக முக்கியமான டிஜிஓ(மகப்பேறு) எம்.டி.,(இதயவியல்), உள்ளிட்ட டாக்டர்கள் இல்லை.
இதனால் கர்ப்பிணிகள் சிகிச்சையே நடக்கவில்லை. தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் கர்ப்பிணிகள் தங்களது பிரசவத்திற்கு மிகவும் சிரமம் அடைகின்றனர். வலியோடு துடித்து வந்தாலும், கம்பம் சீமாங் சென்டருக்கு செல்லுங்கள் அல்லது தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுங்கள் என விரட்டியடிக்கப்படுகின்றநனர். எனவே, தேனி மாவட்ட மருத்துவபணிகள் இணை இயக்குநர் உடனடியாக கர்ப்பிணிகள் பிரசவத்தை நடத்திட தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஸ்கேன் மையம் மூடல் மாத ஊசியும் இல்லை

கர்ப்பிணிகள் 3 மாதத்திற்கு மேல் சத்து ஊசிகள், மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேன் எடுக்கவேண்டும். இவர்களுக்கு அனைத்து வசதிகளும் இங்கு இருந்தும் டாக்டர்கள் கர்ப்பிணிகளை கண்டாலே கம்பம், தேனிக்கு செல்லுங்கள் என விரட்டுகின்றனர். பஸ்கள் அதிகம் இல்லாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு சிகிச்சை பெறவேண்டிய கட்டாயம் கர்ப்பிணிகளுக்கு உள்ளதால் உடனடியாக இங்கு பிரசவத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர தேனி கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Tags : Uththamapalaiyam Government Hospital ,obstetricians , Uthamapalaiyam, Pregnancy status
× RELATED உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு மின்சாதன பொருட்கள் வழங்கல்