×

50 வயதிற்கு மேற்பட்டோருக்கு பணி மறுப்பு: 100 நாள் வேலை கேட்டு பெண்கள் முற்றுகை

நெல்லை: ஐம்பது வயதிற்கு மேற்பட்டோருக்கு பணி மறுக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி நெல்லை கலெக்டர் அலுவலகத்ைத பெண்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர். ஏர்வாடி வடமலையான் கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமையில் அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொடுமுடியாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது, வள்ளியூர் வழியாக மட்டுமே செல்கிறது. ஏர்வாடி வடமலையான் கால்வாய்க்கு அத்தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள நஞ்சை நிலங்கள் வாடி கிடக்கின்றன. எனவே அப்பகுதியில் நடக்கும் பால வேலைகள் முடிந்தவுடன் எங்கள் பகுதிக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிக்கோனேந்தல் அருகே கூவாச்சிப்பட்டி பகுதி பெண்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது வேலை கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் வாழ்க்கை நடத்துவதற்கு சிரமமாக உள்ளது. எனவே 100 நாள் வேலை திட்டத்தில் எங்களுக்கும் பணி வழங்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.

நெல்லை அருகே உன்னங்குளம் பஞ்சாயத்து ரெங்கராஜபுரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் சுமார் 10 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் 1.60 சென்ட் நிலத்தை எங்கள் ஊருக்கு பட்டா போட்டு தருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இப்போது வேறு டவுன் பஞ்சாயத்திற்கு அதை அளித்துவிட்டனர். எங்கள் ஊர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3.5 கிமீ தொலைவில் உள்ளது. எங்கள் கிராமத்தை சுற்றிலும் 20 கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். எனவே  அந்த இடத்தில் எங்கள் பகுதிக்கு தேவையான உயர்நிலைப்பள்ளி அல்லது கல்லூரி அமைத்து தரும்படி கேட்டு கொள்கிறோம்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி அருகே கரந்தாநேரி ஊராட்சி மக்கள் தமிழ் தேசிய கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் ஆரோன் செல்லத்துரை தலைமையில் அளித்த மனுவில், ‘‘கரந்தாநேரி ஊராட்சியில் வீட்டுமனை வரைபட ஒப்புதல் மற்றும் வீட்டு மனை தீர்வை ஆகியவை போலியாக வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் டிஎஸ்பியிடமும் மனு அளித்துள்ளோம். கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Siege ,women , 100 day work, women, siege
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது