×

பாஜக அரசு ஜனநாயகத்தை மதிப்பதே இல்லை. மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை கூட முடக்கப்படுகிறது : முதல்வர் நாராயணசாமி ஆதங்கம்!!

புதுச்சேரி:பாஜக ஆட்சியில் மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை முடக்கப்படுகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடத்தப்பட்டது. பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை அருகில் முதல்வர் நாராயணசாமி அமைதி பேரணியை தொடங்கி வைத்தார். அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் எம்என்ஆர் பாலன், எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், முன்னாள் எம்எல்ஏ நீல.கங்காதரன் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தலைமை தபால் நிலையம் அருகே பேரணி முடிவடைந்தது.

பேரணியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது,உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான சித்திரவதைக்கு பின்னர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக அம்மாநில பாஜக அரசு உள்ளது. அதேசமயம் தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தியதோடு, ராகுல்காந்தியை கீழே பிடித்தும் தள்ளினர். மேலும் அவரை கைது செய்து மாலையில் விடுவித்தனர். இருந்தபோதும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் 2 நாட்கள் கழித்து ஹத்ராஸ் பகுதிக்கு மீண்டும் சென்று இளம்பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த தைரியம் யாருக்கு வரும்? சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சிக்குத்தான் அடித்தட்டு மக்களின் கஷ்டங்கள் தெரியும். மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை மதிப்பதே இல்லை. நாட்டு மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை கூட முடக்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் நாம் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் அதனை தடுப்பதற்காக மத்திய அரசு ஒருவரை இங்கு அனுப்பி வைத்துள்ளது. அவர் புதுவை மாநிலத்தில் நலத்திட்டங்களை முடக்குவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார். அதையும் மீறி கடந்த நான்கரை ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுத்தால் அதையும் தடுத்து நிறுத்துகிறார்கள். மக்கள் விரோத பாஜகவை புதுச்சேரியில் இருந்து விரட்ட நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : government ,BJP ,Narayanasamy Adangam , BJP, Government, Speech, Writing, Chief Minister Narayanasamy, Adangam
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...