×

மயானம் செல்ல பாதை இல்லாததால் இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கி எடுத்து செல்லும் அவலம்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே கூழையாறு கிராமத்தில் மயானம் செல்வதற்கு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கி எடுத்துச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த கூழையாறு கிராமத்தில் வேல்நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை பக்கிங்காம் கால்வாயை கடந்து ஒரு கிலோமீட்டர் தூரம் மயானத்திற்கு சென்று உடல்களை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களின் சடலத்தை பக்கிங்காம் கால்வாயில் இறங்கி மார்பளவு தண்ணீரில் சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கூழையாறு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சாமிதுரை என்பவர் வயது முதிர்வின் காரணமாக இறந்துவிட்டார். இவரின் உடலை அப்பகுதி கிராம மக்கள் கிராமத்திலிருந்து சுமந்து பக்கிங்காம் கால்வாயில் இறங்கி மார்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்று அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், கூழையாறு கிராமம் வேல்நகரில் உள்ள மயானத்திற்கு இறந்தவரின் சடலத்தை எடுத்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. மழைக்காலம் வந்தால் பக்கிங்காம் கால்வாயில் அதிக தண்ணீர் வரத்து ஏற்படும்.அப்போது இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே வேல்நகரில் உள்ள மக்களின் நலன்கருதி பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே மயானத்திற்கு செல்லபாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags : cemetery ,deceased , Kollidam, cemetery
× RELATED திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி...