×

ரபாடா, அக்சர் அபார பந்து வீச்சு ஆர்சிபி.யை வீழ்த்தியது டெல்லி

துபாய்: ராயல் சேலஞ்சர்ஸ் உடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் ஆடம் ஸம்பா, குர்கீரத் மானுக்கு பதிலாக மொயீன் அலி, முகமது சிராஜ் இடம் பெற்றனர். கேப்பிடல்ஸ் அணியில் காயம் காரணமாக விலகிய அமித் மிஷ்ராவுக்கு பதிலாக அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டார்.

கேப்பிடல்ஸ் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.4 ஓவரில் 68 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா 42 ரன் (23 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி வில்லியர்ஸ் வசம் பிடிபட்டார். தவான் 32 ரன் எடுத்து (28 பந்து, 3 பவுண்டரி) உடனா வேகத்தில் மொயீன் அலி வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரன் மட்டுமே எடுத்து மொயீன் சுழலில் படிக்கல் வசம் பிடிபட... கேப்பிடல்ஸ் அணி 11.3 ஓவரில் 90 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், ரிஷப் பன்ட் - மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் இணைந்து 41 பந்தில் 89 ரன் விளாசி அசத்தினர். பன்ட் 37 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சிராஜ் வேகத்தில் கிளீன் போல்டானார். ஸ்டாய்னிஸ் 24 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. ஸ்டாய்னிஸ் 53 ரன் (26 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் சிராஜ் 2, மொயீன், உடனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது.

இதனை தொடர்ந்து களம் இறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தத் படிக்கல் (4), பின்ச் (13) ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து விளையாடிய கேப்டன் கோலி 39 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி உடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய வில்லியர்ஸ், மொயின் அலி, வாஷிங்டன் சுந்தர், துபே, உடானா மற்றும் சிராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  சைனி, சஹல் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது.  இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை நோக்கி முன்னேறியுள்ளது.

Tags : Rabada ,Akshar Apara ,Delhi ,RCB , Rabada, Akshar Apara bowling Delhi defeated RCB
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு