×

அப்பாடா, பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி இல்லை: தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, கர்நாடகாவில் உள்ள தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. பர்சுல கொஞ்சமா காசு இருந்தால் கூட, ஒரு கொத்து பரோட்டா உள்ளே தள்ளினால், வயிறு கம்முனு ஆகிடும். பெரிய, சிறிய ஓட்டல் முதல் தள்ளுவண்டி கடைகளில் கூட கிடைக்கும் அயிட்டம் இது. கொத்து பரோட்டா, வீ்ச்சு பரோட்டா, ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு. வறுத்து எடுத்த விருது நகர் புரோட்டாவுக்கு மவுசு தனி. சூடாக பரபரவென பிய்த்துப்போட்டு சால்னா அல்லது குருமாவை ஊற்றி சாப்பிட்டால், வயிறோடு மனசும் நிறைந்து விடும். இப்படி, நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட பரோட்டாவுக்கு 18 சதவீதம் விதித்த விவகாரம், சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.  பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம், ரெடிமேட் பரோட்டா, சப்பாத்தியை தயாரித்து விற்கிறது.

கடந்த ஜூன் மாதம், பரோட்டா வரி விதிப்பு தொடர்பாக இந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, ஜிஎஸ்டி தீர்ப்பாயம் விசாரித்தது. அதில், ரொட்டி வேறு, பரோட்டா வேறு என்ற விளக்கம் அளித்த தீர்ப்பாயம். ரொட்டிக்கு 5 சதவீதம், பரோட்டாவுக்கு 18 சதவீதம் வரி என கறாராக கூறிவிட்டது.  இது நெட்டிசன்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்திவிட்டது. நாடு இருக்கும் பிரச்னையில் இதுதானா முக்கியம் என்று சமூக வலைதளங்களில் அனல் பறக்க விவாதித்தனர். இதற்கிடையில் அந்த நிறுவனத்தின் மேல்  முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகாவில் உள்ள ஜிஎஸ்டி தீர்ப்பாயம், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்துள்ளது. ஆனால், எவ்வளவு ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என தனது உத்தரவில் கூறவில்லை. எப்படியோ, நெட்டிசன்கள் கலாய்த்த ‘18 சதவீத’ பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது.

Tags : Abada ,Baroda , Abada, Baroda does not have 18% GST: Tribunal order
× RELATED ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் மும்பை, பரோடா