×

கொரோனா சிகிச்சைக்கு இடையே காரில் உலா வந்த அதிபர் டிரம்ப்: விரைவில் டிஸ்சார்ஜ்?

வாஷிங்டன்: அமெரிக்காவில் ராணுவ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட டிரம்ப், நேற்று திடீரென காரில் பயணித்து மக்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா இருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கடந்த வியாழன்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளியன்று அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து டிரம்ப்புக்கு தரப்பட்டுள்ளது.

இதனால் காய்ச்சல், சோர்வுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உடல்நலம் தேறி உள்ளார். இந்நிலையில், அதிபர் டிரம்ப் முன்னறிவிப்பு ஏதுமின்றி மருத்துவமனை அருகாமை பகுதியில் நேற்று திடீரென காரில் பயணித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அதிபர் டிரம்ப் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் இருந்து வாஷிங்டன் புறநகர் பகுதியான மேரிலாண்ட் வரை பெதஸ்தா வழியாக பயணித்து தனது ஆதரவாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். இதனால் மருத்துவமனை அருகே திரண்டு இருந்த ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.

காரில் அமர்ந்திருந்த டிரம்ப், சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்களை பார்த்து கை தட்டியபடி காரில் பயணித்தார். இந்த வீடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள டிரம்ப், ‘‘ மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் எனது  ஆதரவாளர்கள் அனைவரையும் உண்மையில் நான் பாராட்டுகிறேன். உண்மை என்னவென்றால் அவர்கள் இந்த நாட்டை நேசிக்கின்றனர். இதற்கு முன்பு இருந்ததை விட நாம் எவ்வாறு சிறந்தவர்களாக இருக்கிறோம் என்பதை பார்க்கிறோம்”என பதிவிட்டு இருந்தார். உடல் நலம் தேறியிருப்பதால் அதிபர் டிரம்ப் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Trump , President Trump rides in car between corona treatments: Discharge soon?
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...