பாக், சீனாவுக்கு எதிராக போரை சந்திக்க இந்தியா தயாராக உள்ளது: விமான படை தளபதி பேட்டி

புதுடெல்லி: ‘‘எந்த சவாலையும் சந்திக்க இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது’’ என விமானப்படை தளபதி பகதூரியா தெரிவித்துள்ளார். விமானப்படை தினம் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பகதூரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சீனாவின் விமானப்படையினால் இந்தியாவின் ஆற்றலை பெற முடியாது. ஆனால் அதே நேரத்தில் எதிரியின் சக்தியை குறைத்து மதிப்பிடுவது தொடர்பான கேள்விக்கே இடமில்லை. அதுபோன்ற சூழல் ஏற்பட்டால் வடக்கு மற்றும் மேற்கு எல்லைப்பகுதிகளில் போரை சமாளிப்பதற்காக இந்திய விமானப்படை தயாராக இருக்கின்றது.

தற்செயலாக நிகழக்கூடிய எதனையும் சமாளிக்கும் வகையில் வலுவாக விமானப்படை நிறுத்தப்பட்டுள்ளது என்பதில் உறுதியாக இருங்கள். லடாக் ஒரு சிறிய பகுதி. அனைத்து பகுதிகளிலும் விமானப்படை நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு எல்லையில் எந்தஒரு நடவடிக்கையையும் எதிர்கொள்ளும் வகையில் விமான படை சிறப்பான நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் போர் ஏற்பட்டால் அதற்கு இந்திய விமானப்படை தயாரா என்று கேட்டபோது விமானப்படை தளபதி பகதூரியா, “நமது திறன்கள் நமது எதிரியை ஆச்சரியப்படுத்தியுள்ளன. இந்திய விமானப்படை விரைவாக மாறுகிறது,” என்று அவர் கூறினார்.

களத்தில் ரபேல்

* இந்தியா ஏற்கனவே எல்லையில் சுகோய் 30 எம்கேஐ, ஜாக்குவார் மற்றும் மிராஜ் 2000 என அனைத்து முன்னணி போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.

* விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்களும் கிழக்கு லடாக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது.

* கிழக்கு லடாக் பிராந்தியில் போர் விமானங்கள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

* இதன் மூலமாக எந்த ஒரு நிகழ்வையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>